Published : 09 Feb 2023 08:29 PM
Last Updated : 09 Feb 2023 08:29 PM

‘உயரக் குறைபாடுள்ள குழந்தைகள் சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடம்’

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை | கோப்புப்படம்

மதுரை: உயரக் குறைபாடுள்ள குழந்தைகள் சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது மருத்துவக் கல்வி இயக்குனரக செயல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அகச்சுரப்பியல் மருத்துவத் துறை செயல்படுகிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த சிகிச்சைத் துறை செயல்படுகிறது. பலவித ஹார்மோன் குறைபாடுகளுக்கு இத்துறையில் மருத்துவர்கள் சிகிச்சை வழங்குகிறார்கள். தைராய்டு, உடல்பருமன், உயரக் குறைபாடுகள், பருவமடைதல் பிரச்சினைகள், பிட்யூட்டரி மற்றும் அட்ரீனல் கட்டிகள், ஆணா/பெண்ணா என்று தீர்மானிக்க இயலாத பச்சிளம் குழந்தைகளின் பாலினம் உறுதி செய்தல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இத்துறையில் தமிழகத்தில் இதுவரை இல்லாதவகையில் தைராய்டு பரிசோதனை நடந்துள்ளது. மேலும், உயரக் குறைபாடுள்ள குழந்தைகள் சிகிச்சைகள் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து டீன் ரத்தினவேலு, அகச்சுரப்பியல் துறைத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் கூறியதாவது;
“தமிழகத்திலே மதுரையில்தான் அதிகளவு தைராய்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 20,000 அதிகமான தைராய்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள், மாதவிடாய் மற்றும் கர்ப்பபை பிரச்சினை உள்ள பெண்கள், குழந்தை பேறின்மை உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனைகள் நடந்துள்ளன.

தினமும் 60 முதல் 80 எண்ணிக்கையில் புற நோயாளிகள் தைராக்ஸின் மற்றும் கார்பிமஸோல் மாத்திரைகள் இலவசமாக பெற்று வருகிறார்கள். 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை உயரக்குறைபாடுகளுக்கான காரணம் கண்டறியப்பட்டு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு நோய்க்கான விலை உயர்ந்த மருந்துகளை (Inj Growth Hormone) காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மேல் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளுக்கு Growth hormone, IGFI ரத்தப் பரிசோதனைகள் மூலம் உயரச் சுரப்பி குறைபாடுகள் கண்டறியப்பட்டு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த மருந்துகள் வழங்கப்படுகிறது.

மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் செயல் ஆய்வில் தமிழகத்திலேயே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. இந்த மருத்துவ சிகிச்சை மூலம் குழந்தைகள் உயரம் 15 முதல் 25 செ.மீ., வரை வளர்ந்துள்ளனர். பருவமடைதல் பிரச்சினைகள், தாடி மீசை தோன்றாத 18 வயது நிரம்பிய ஆண்கள், குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு சிறப்பு ரத்த ஹோர்மோன் பரிசோதனைகள் ஜெர்மனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை கொண்டு உலகத்தரத்தில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

அதுபோல், தாடி மற்றும் மீசை வளராத, ஆண்குறி சிறியதாக உள்ள 18 வயது நிரம்பிய ஆண்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் டெஸ்டோஸ்டிரைன் ஹோர்மோன் ஊசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற சிறப்புகளில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இத்துறையில் தமிழகத்திலே முதல் முறையாக அரசு மருத்துவக்கல்லூரிகளில் DM Endocrinology எனும் உயர் சிறப்பு மருத்துவப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x