Published : 09 Feb 2023 04:03 PM
Last Updated : 09 Feb 2023 04:03 PM

மழையிலும் தாக்குப்பிடித்த பாரம்பரிய ரக நெற்பயிர்கள்: விவசாயிகளுக்கு கைகொடுத்த இயற்கை விவசாயம்

திருவாரூர்: அறுவடை தருணத்தில் மழை பெய்தபோதும் பாரம்பரிய ரக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விடாமல் நிமிர்ந்து நின்று தங்களை பாதுகாத்துள்ளதாக பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள இயற்கை விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், அதேநேரம் இந்த மழையை தாங்கி நின்றதால் பாரம்பரிய ரக நெற்பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பாரம்பரிய ரக நெல் சாகுபடி விவசாயிகள் தெரிவித்தனர்.

அதன்படி, பாரம்பரிய ரக நெல் சாகுபடி மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் ஜெயராமன் விவசாய பண்ணையில் நேற்று முன்தினம் முதல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த, 70 நாட்கள் முதல் 160 நாட்கள் வரை வயதுள்ள புழுதிக்கார், ரோஸ்கார், சின்னார், மரதொண்டி, காளான் நமக், கருத்தக்கார், சிங்கினிகார், குருவிக்கார், கார்த்திகை சம்பா, ஆனைக்கொம்பன், ரத்தசாலி, சிறுமிளகி, பெருமிளகி, கருமிளகி போன்ற பாரம்பரிய ரக நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் ஸ்ரீராம் என்பவரின் 100 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 80 வகையான பாரம்பரிய நெல் அறுவடைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் கூறியதாவது: ரசாயன உரங்கள் இடப்பட்ட நெற்பயிர்கள் மீது மழைநீர் படும்போது, சுமை தாங்க முடியாமல் தரையில் சாய்ந்து விடுகின்றன. தொடர்ச்சியாக மழை பெய்ததால் நெல்மணிகள் முளைத்து வீணாகியுள்ளன.

ஆனால், ரசாயன கலப்பில்லாமல் இயற்கையான உரங்கள் மூலம் கிடைக்கும் தரமான சத்துக்களால் பாரம்பரிய நெற்பயிர்களின் தண்டுகளுக்கு மழை நீரை தாங்கி நிற்கும் வலிமை கிடைப்பால், திடமாக நிமிர்ந்து நிற்கின்றன. மேலும், பயிர்களை மழைநீர் சூழ்ந்து நின்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே, விவசாயிகள் முற்றிலும் ரசாயன உரத்தை கைவிட்டு, இயற்கை முறையில் பாரம்பரிய ரக நெல் சாகுபடியை செய்யுங்கள் என நாங்கள் வற்புறுத்தவில்லை.

தங்களுடைய நிலப்பரப்பில் ஒரு பகுதியில் ரசாயன உரம் கலக்காத பாரம்பரிய ரக நெல் சாகுபடியை சரியான தருணத்தில் விதைத்து பராமரித்தால், பேரிடர் காலங்களிலும் பயிர்கள் அழியும் நிலை ஏற்படாது. நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் மீட்டெடுத்த 200 பாரம்பரிய நெல் ரகங்கள் தலைமுறைகள் கடந்து நீடிக்க விவசாயிகள், இந்த ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். இதனால் அரசின் நிவாரணத்தை எதிர்பார்க்காத நிலை ஏற்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x