Published : 04 Feb 2023 10:25 PM
Last Updated : 04 Feb 2023 10:25 PM
மதுரை: மதுரை மேலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து மாங்குளம் செல்லும் சாலையில் பூசாரிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு கல்குவாரிக்காக பாதி உடைக்கப்பட்ட பாறையை இப்பகுதியினர் பாறைப்பள்ளம் என அழைக்கின்றனர். இப்பாறையில் குகை போன்ற புடவு ஒன்றுள்ளது. இப்புடவின் பக்கவாட்டுப்பாறைகள், மேலேயுள்ள பாறைகளிலும் ஏராளமான ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்து மாங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பாண்டித்துரை அளித்த தகவலின்படி பாறை ஓவியங்கள் ஆய்வாளர் பாலாபாரதி, தொன்மை ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பூசாரிபட்டியிலுள்ள பாறை பழங்காலத்தில் அக்கால மக்களின் வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும். பாறை ஓவியங்கள் பழங்கால மனிதர்களின் வரலாற்று பதிவாகும். வெள்ளை, கருஞ்சிவப்பு நிறத்தில் நிறைய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதில், மனித, விலங்கின உருவங்கள், வேட்டைக்காட்சிகள், யானையின் உருவம் வரையப்பட்டுள்ளது. பொதுவாக பாறை ஓவியங்கள் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாகும். ஒவ்வொரு ஓவியத்தின் நிறம், அடர்த்தியைப் பார்க்கும்போது பல்வேறு காலகட்டத்தில் வரையப்பட்டதாக இருக்கலாம்.
மதுரை மாவட்டத்தில் கொங்கர் புளியங்குளம், கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, அணைப்பட்டி, கிடாரிப்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு, நடுமுதலைகுளம், புலிப்புடவு, புதூர்மலை, திருவாதவூர், வாசிமலை ஆகிய 12 இடங்களில் பாறை ஓவியங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது பூசாரிப்பட்டி 13வது இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இந்த ஓவியங்கள் மீது சிலர் தற்போது பெயிண்ட் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற செயல்களை தவிர்த்து நமது பழமையை பாதுகாத்து நமது தொன்மையையும் பாதுகாக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT