Published : 26 Jan 2023 04:23 AM
Last Updated : 26 Jan 2023 04:23 AM

120 அரங்குகளில் லட்சக்கணக்கான நூல்களுடன் சிவகங்கையில் புத்தக திருவிழா

ஆட்சியர் மதுசூதன் ரெட்டி | கோப்புப் படம்

சிவகங்கை: சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 120 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்களுடன் புத்தகத் திருவிழா நாளை (ஜன.27) தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பபாசி அமைப்புடன் இணைந்து 2-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை சிவகங்கை மன்னர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜன.27-ம் தேதி நடத்துகிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விழாவைத் தொடங்கி வைக்கிறார். பிப்.6-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் 110 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்றரை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுடன் இலக்கியத் திருவிழாவும் சேர்ந்து நடத்தப்படும். அரசின் சாதனைகள், தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் கீழடி, அறிவியல் இயக்கம், போக்குவரத்து விதிமுறைகள் போன்றவை குறித்த அரங்குகள், குழந்தைகளுக்கான திரையரங்கு, கோளரங்கம் அமைக்கப்படும்.

புத்தக அரங்குகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். தினமும் ஒரு மணி நேரம் வாசிப்பு நேரம் இருக்கும். இதில் 500 பேர் அமர்ந்து புத்தகங்கள் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலக்கியத் திருவிழா ஜன.28 முதல் ஜன.30 வரை நடைபெறுகிறது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

புத்தகத் திருவிழாவையொட்டி, சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவால் நூலகங்களில் படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 435 பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x