Published : 25 Jan 2023 04:27 AM
Last Updated : 25 Jan 2023 04:27 AM

10 பெண் குழந்தைகள் பெயரில் செல்வமகள் சேமிப்பு கணக்கு: உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமிக்கு பாராட்டு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுமி மோனிகாவிடம் தபால் நிலைய அதிகாரி செல்வமகள் சேமிப்பு புத்தகத்தை வழங்கினார்.

வேலூர்: வேலூர் அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள்கள் மோனிகா, மைத்ரி வர்ஷினி. மூத்த மகள் மோனிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயதில் இருந்தே சேமிக்கும் பழக்கம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிறிய உண்டியலை தனது மகளுக்கு ராஜா வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், தினசரி சலூன் கடையில் வரும் வருமானத்தில் சிறிய தொகையை அவரிடம் கொடுத்து உண்டியலில் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார்.

இதில், ஆர்வம் கொண்ட சிறுமி மோனிகா தனக்கு வரும் பணத்தை செலவு செய்யாமல் உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். மேலும், அந்த பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவிடவும் அவருக்கு ராஜா அறிவுரை கூறியுள்ளார். அதன்படி, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.2,200 தொகையும், பிரமதரின் நிவாரண நிதிக்கு ரூ.2,200 தொகையை உண்டியல் சேமிப்பில் இருந்து மோனிகா வழங்கியுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உண்டியல் சேமிப்பு பணத்தை செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தெரியாத பெண் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கி பராமரிக்க முடிவு செய்தனர். உண்டியல் சேமிப்பு பணம் ரூ.2,500 தொகையில் தலா ரூ.250 வீதம் 10 பெண் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு கணக்கை வேலூர் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி அதற்கான புத்தகங்களை உரியவர்களிடம் மோனிகாவும், ராஜாவும் வழங்கினர்.

‘‘சேமிக்கும் பழக்கம் சிறுவயதில் இருந்தே இருந்தால் பணத்தை வீணாக செலவழிக்கும் பழக்கமும் வராது. சிறிய தொகையாக இருந்தாலும் நாளடைவில் அது பெரிய தொகையாக மாறும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள முடியும்’’ என சிறுமி மோனிகாவின் தந்தை ராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x