Published : 19 Jan 2023 01:31 AM
Last Updated : 19 Jan 2023 01:31 AM

ராமநாதபுரம் | அன்னதானத்திற்காக ஒரு ஊரையே தானமாக வழங்கிய சேதுபதி மன்னர் - 17ம் நூற்றாண்டு கல்வெட்டில் தகவல்

ராமநாதபுரம் அருகே சே. கொடிக்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் முன் பின் பக்கங்கள் படங்கள்:வே. ராஜகுரு.

ராமேசுவரம்: அன்னதானத்திற்காக சேதுபதி மன்னர் ஒரு ஊரை தானமாக வழங்கியதைத் தெரிவிக்கும் கி.பி.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சே.கொடிக்குளத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சே.கொடிக்குளம், கழுநீர்பாலமுருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக பேரையூர் அரசுப் ஆசிரியர் கு.முனியசாமி கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து படித்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, "நான்கரை அடி உயரமும் ஒன்னரை அடி அகலமும் உள்ள ஒரு கடற்கரைப் பாறை கல் தூணின் இரண்டு பக்கத்தில் கல்வெட்டும், ஒரு பக்கத்தில் செங்கோல், சூரியன், சந்திரனும் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மொத்தம் 26 வரிகள் கொண்டது.

‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனத் தொடங்கி ‘போவாராகவும்’ என கல்வெட்டு முடிகிறது. புண்ணிய காலத்தில் ரகுநாத திருமலை சேதுபதி காத்த தேவருக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக ரகுனாத தேவர் அன்னதான பற்றுக்குக் சே.கொடிக்குளம் என்ற ஊர் சர்வ மானியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு 1594 சொல்லப்பட்டுள்ளது. இதன் ஆண்டு கி.பி.1672 ஆகும்.

கி.பி. 1646 முதல் 1676 வரை சேதுநாட்டை ஆண்ட ரகுநாத திருமலை சேதுபதி தனக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக தன் பெயரில் உருவாக்கிய ரகுநாத தேவர் அன்னதானப் பற்றுக்கு கல்வெட்டுள்ள கொடிக்குளம் என்ற ஊரை தானமாக வழங்கியுள்ளார். அன்னதானப்பற்று என்பது அன்னதானம் செய்யும் மடத்திற்கு தானமாக வழங்கிய உரிமை நிலம் ஆகும். இங்கு மன்னர் ஒரு ஊரையே தானமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வ மானியமாக தான் வழங்கிய இத்தானத்திற்கு கெடுதல் செய்பவர்கள் கங்கைக்கரையிலும் சேதுக்கரையிலும் மாதா, பிதா, குருவையும், காராம் பசுவையும் கொன்ற தோஷத்திலே போவார்கள் என கல்வெட்டின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதினாராயன் தேவர் என்பவர் இவ்வூரைச் சேர்ந்த சேதுபதிகளின் அரசப் பிரதிநிதியாக இருக்கலாம்.

புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம் வருபவர்களுக்கு உணவு, நீர், தங்கும் இடம் வழங்க 5 மைல் தூரத்திற்கு ஒன்று என்ற அளவில் பரவலாக மடம், சத்திரங்களை சேதுபதி மன்னர்கள் உருவாக்கினர். இம்மன்னர்களில் முதன்முதலில் அன்னதானச் சத்திரங்களை உருவாக்கும் வழக்கத்தை கொண்டுவந்தவர் ரகுநாத திருமலை சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னரால் இவ்வூரில் கட்டப்பட்ட அன்னதான மடம் கோயிலின் தெற்குப் பகுதியில் இருந்து அழிந்துள்ளது. எஞ்சிய அதன் 10 அடி நீளமுள்ள சிறிய சுவர் தற்போதும் இங்கு உள்ளது. இக்கோயிலில் சங்க இலக்கியங்களில் பாலைத் திணைக்குரியதாகச் சொல்லப்படும் மருத்துவக் குணமுள்ள உகாய் மரம் வளர்ந்து வருகிறது. இம்மரம் ஆங்கிலத்தில் மிஸ்வாக் என அழைக்கப்படுகிறது" இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x