Last Updated : 17 Jan, 2023 08:26 PM

 

Published : 17 Jan 2023 08:26 PM
Last Updated : 17 Jan 2023 08:26 PM

நாட்டரசன் கோட்டையில் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா: மாட்டு வண்டி ஓட்டி ஊர்வலம் வந்த சிவகங்கை ஆட்சியர்

நாட்டரசன்கோட்டையில் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மசூதன்ரெட்டி.

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஒரே சமயத்தில் 914 பெண்கள் பொங்கல் வைத்தனர். மேலும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மாட்டு வண்டி ஓட்டி ஊர்வலமாக வந்தார்.

நாட்டரசன்கோட்டை பகுதியில் அதிகளவில் நகரத்தார் வசிக்கின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து முதல் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர். இதற்காக திருமணம் முடிந்த நகரத்தாரின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாகக் கணக்கிடுவர். அவர்களது பெயரை சீட்டில் எழுதி வெள்ளிப் பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். முதல் சீட்டில் வரும் குடும்பத்தினர் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன்பாக முதல் பானையாக பொங்கல் வைப்பர்.

அதன்படி இன்று மாலை நடந்த பொங்கல் விழாவில் 914 நகரத்தார் பெண்கள் பொங்கல் வைத்தனர். முதல் சீட்டில் தேர்வான குடும்பத்தினர் மண் பானையில் பொங்கல் வைத்தனர். மற்றவர்கள் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைத்தனர். மேலும் மற்ற சமூகத்தைச் சேர்ந்த 200-க் கும் மேற்பட்டோர் நகரத்தாருக்கு அருகிலேயே தனி வரிசையில் பொங்கல் வைத்தனர். அனைவரும் வெண் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் இந்த விழாவில் உறவினர்கள் நலன் விசாரித்து வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இஸ்ரேல், டென்மார்க், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 60 சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

சுற்றுலாத் துறை சார்பில் வெளிநாட்டினரை மாட்டு வண்டியில் அழைத்து சென்றனர். கிராமிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்துடன் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியும் வேட்டி, சட்டை அணிந்து மாட்டு வண்டியை ஓட்டி ஊர்வலமாக வந்தார்.

இதுகுறித்து நாட்டரசன் கோட்டை நகரத்தார் கூறும்போது, “200 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் பொங்கல் கொண்டாடி வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு 400 புள்ளிகள் தான் இருந்தன. தற்போது 900 புள்ளிகளுக்கு மேல் உள்ளது. எங்களில் பலர், வெளியூர், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் எந்த விழாவுக்கு வராவிட்டாலும், செவ்வாய் பொங்கலுக்கு வந்துவிடுவர். இந்த விழா உறவினர்களை ஒன்று சேர்க்கும் விழா” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x