Published : 11 Jan 2023 11:01 PM
Last Updated : 11 Jan 2023 11:01 PM
சின்னமனூர்: வெளிமாநிலங்களில் இருந்து தேனி வழியே சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்துள்ளன. இவர்களுக்காக தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் தகவல் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழக கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. கேரளாவின் குளிர் பருவநிலை, பசுமை பள்ளத்தாக்கு, படகுகள் இயக்கம் போன்றவற்றிற்காக ஏராளமான சுற்றுலா பணிகள் தேனி வழியே கேரளா செல்வது வழக்கம். இந்த வாகனங்கள் அனைத்தும் தேனி மாவட்டத்தின் புறவழிச்சாலை வழியே கடந்து செல்கின்றன. இதனால் இப்பகுதி மோட்டல்கள், ஓட்டல்கள், பேக்கரி, பழ விற்பனையகம் நிறைந்த வர்த்தக பகுதியாக மாறிவிட்டது.
கரோனா ஊரடங்கிற்குப்பிறகு சில மாதங்களாக வெளிநாட்டு பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் இவர்களை கவர்வதற்காக தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் உணவகங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளும் இப்பகுதி உணவகங்களில் பரவலாக இடம்பெறத் தொடங்கி உள்ளன. இங்குள்ள பணியாளர்கள் பலரும் இந்த மொழியில் அடிப்படை வார்த்தைகளை தெரிந்து வைத்திருப்பதால் வெளிமாநில பக்தர்களை எளிதில் கவர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடகா மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கூறுகையில், "சபரிமலைக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கிறேன். மொழி பிரச்னை பெரியளவில் இருந்ததில்லை. பலரும் எங்கள் மொழியை தட்டுத்தடுமாறி பேசி புரிய வைத்து விடுகின்றனர்" என்றார். இப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் கூறுகையில், "பொதுவாக தேனி மாவட்ட புறவழிச்சாலை உணவகங்களில் தமிழ், மலையாளம் இடம் பெற்றிருக்கும். தற்போது வெளிமாநில பக்தர்கள் வருகையில், கன்னடம், தெலுங்கு, இந்தி போன்றவற்றையும் குறிப்பிட்டுள்ளோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT