Published : 10 Jan 2023 04:15 AM
Last Updated : 10 Jan 2023 04:15 AM
மதுரை: இயற்கை முறை விவசாயம் மூலம்நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களைசாகுபடி செய்து, ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர் மதுரை மருத்துவ தம்பதியினர்.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் பாலாஜி திருவடி. இவரது மனைவி கவுசல்யா, கண் மருத்துவர். இவர்கள் மருத்துவ சேவையோடு, கடந்த 5 ஆண்டு களாக அழகர்கோவில் அருகே கள்ளந்திரியில் தங்களுக்கு சொந்தமான ஏழரை ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதற்காக தங்களுக்குச் சொந்த மான 3 நாட்டு மாடுகள் மூலம் இயற்கை உரங்களை தயாரித்து ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் செய்து வருகின்றனர். தென்னை, கொய்யா, நெல், காய்கறிகள், கரும்பு என பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இது குறித்து மருத்துவ தம்பதி யினர் கூறியதாவது: எங்களது முன்னோர்கள் காலத்திலிருந்தே விவசாயம் செய்து வந்த போதிலும், ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த பின்னர் இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். ஜீரோ பட்ஜெட் முறையில், சொட்டு நீர்ப்பாசனம், ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை மூலம் மண்ணை வளப்படுத்துதல், நாட்டு மாடுகளின் மூலம் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்வதுடன், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா போன்றவற்றை நாங்களே உற்பத்தி செய்து அதனை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்துகிறோம். மீன்கரைசல் மட்டுமே வெளியிலிருந்து வாங்கு கிறோம்.
நான்கு ஏக்கரில் தென்னை, கொய்யா, நெல்லி, வாழை, நிலக்கடலை, சின்ன வெங்காயம் மற்றும் அன்றாட வீட்டுத்தேவைக்கான காய்கறிகளை பயிரிட்டுள்ளோம். தற்போது செங்கரும்பு வளர்ந்து அறுவடை செய்து வருகிறோம். லாப நோக்க மின்றி விவசாயம் செய்து, உறவினர்கள், வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT