Published : 08 Jan 2023 04:23 AM
Last Updated : 08 Jan 2023 04:23 AM
கோவை: கோவை விழாவையொட்டி செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் வேளாண் திருவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, காங்கயம் கால்நடை அழகு போட்டிகள் நடைபெற்றன. பசுமாடு, காளைகள் மற்றும் எருமை மாடு ஆகியவை வயதுக்கு ஏற்ப நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகைக்கும் தனித் தனியாக போட்டிகள் நடைபெற்றன. மேலும், காளை வகைகளில் மயிலை காளை, செவலை காளை, காரிக்காளை என்று பல்வேறு வகையான காளைகளுக்கும் தனித்தனியே போட்டி நடைபெற்றது.
மேலும் நாட்டின ஆடு, நாய், சேவல், குதிரை ஆகியவை பங்கேற்ற கண்காட்சியும் நடைபெற்றது. சிறப்பாக பங்கெடுத்துக் கொண்ட கால் நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியை விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர். திருவிழாவின் முக்கிய அம்சமாக விவசாயத்தை மேம்படச் செய்யும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
ரேஸ்கோர்ஸில் ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’: கோவை விழாவின் ஒரு பகுதியாக ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’ எனப்படும் கலைத்தெரு நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நேற்று தொடங்கியது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்களது ஓவியங்கள், கலைகள் சார்ந்த கட்டமைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.
1,500-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தஙகளது ஓவியங்களை அஞ்சல் அட்டையில் வரைந்து கனவுகளின் வானவில் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தியிருந்தனர்.,அதேபோல, தெய்வீக மற்றும் புராண உருவங்களின் கேரள சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி போன்ற பல்வேறு வகையான கலைப்பொருட்கள், வரலாற்று ஓவியங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆர்ட்ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT