Published : 04 Jan 2023 04:27 AM
Last Updated : 04 Jan 2023 04:27 AM
திருநெல்வேலி: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் திருநெல்வேலி பழையபேட்டையில் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டால் கரும்பு, மஞ்சள், மண் பானைகள், பனை ஓலைகள், அடுப்புக் கட்டிகளுக்கு தனி மதிப்புதான். பொங்கல் சீர்வரிசையில் பித்தளை பாத்திரங்களுக்கு பிரதான இடம் உண்டு. கோயில் விழாக்களில் பொங்கலிடுவதற்கும் பித்தளை பாத்திரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க பித்தளை பாத்திரங்களை தயாரிக்க, திருநெல் வேலி பழைய பேட்டை பகுதியில் பட்டறைகள் செயல்படுகின்றன.
இந்த பட்டறைகளில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு சீர்வரிசையாக வழங்கப்படும் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரை லிட்டர் முதல் 15 லிட்டர் வரையிலான பானைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. பானைகளின் எடை ஒரு கிலோவிலிருந்து 10 கிலோ வரை இருக்கும் என்று, பட்டறை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: இங்கு தயார் செய்யப்படும் பானைகள் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மதுரை உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. ஒருகாலத்தில் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த அளவுக்கு திருநெல்வேலி பழைய பேட்டை மற்றும் தச்சநல்லூர் புதுப்பேட்டை, டவுன் பகுதிகளில் தயாராகும் பித்தளை பாத்திரங்களுக்கு மவுசு இருந்தது.
இங்கு தரமான பித்தளை பாத்திரங்கள் தயாராகிறது. சரியான அளவில் பித்தளை தகடு வெட்டி பொருத்தப்பட்டு பாலிஸ் செய்யப்படுகிறது. நேர்த்தியுடன் ஒவ்வொரு பாத்திரங்களையும் உருவாக்குகிறோம். சரியாக பாலிஸ் செய்யவில்லை என்றால் உணவு மற்றும் தண்ணீர் நிரப்பும் போது அது விஷமாக மாறக்கூடும். அதனால் கவனமுடன் வடிவமைக்கிறோம்” என்றனர். தொழில் நலிவு
பழைய பேட்டை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 300 பட்டறைகள் செயல்பட்டு வந்தன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். நாளடைவில் தொழில் நலிவடைந்து தற்போது 24 பட்டறைகள் தான் இருக்கின்றன. தொழிலாளர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT