Published : 28 Dec 2022 04:43 AM
Last Updated : 28 Dec 2022 04:43 AM
மதுரை: மதுரை மேலவாசல் தூய்மைப் பணியாளர் குடியிருப்பின் முதல் பெண் வழக்கறிஞரை பொதுமக்கள் குதிரையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல வாசல் பகுதியில் அடுக்கு மாடிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கின்றனர்.
இந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம்-சுந்தரி தம்பதியின் 3-வது மகள் துர்கா. இவர் மதுரை மாநகராட்சி ஈவேரா மணியம்மை பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். பின்னர் நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டப்படிப்பில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் நெல்லையில் படித்த நிலையில் 5-வது ஆண்டில் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்தார்.
சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த துர்கா, சென்னையில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் முறைப்படி பதிவு செய்து வழக்கறிஞரானார். மதுரை தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பின் முதல் வழக்கறிஞர் துர்கா. இதனால் மதுரையிலிருந்து சட்ட மாணவியாக சென்னைக்குச் சென்று பதிவுக்குப் பின் வழக்கறிஞராகத் திரும்பிய அவரை வரவேற்க குடியிருப்பு மக்கள் மதுரை ரயில் நிலையத்தில் திரண்டனர்.
வழக்கறிஞர் உடையில் வந்திறங்கிய துர்காவை பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவரை அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது அமர வைத்து மேள, தாளம் முழங்க ரயில் நிலையத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வழியாக மேலவாசல் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். குதிரைக்கு முன் மேளத்துக்கு ஏற்ப பொதுமக்கள் ஆடிப்பாடி உற்சாகமாகச் சென்றனர். வழியில் கிரைம் பிராஞ்சில் உள்ள பெரியார் மார்பளவு சிலைக்கு துர்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து துர்கா ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பொதுமக்கள் மத்தியில் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என் முதல் பணியாக இருக்கும். தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் என்பது இன்னும் முழுமையாகக் கிடைக்காமல் உள்ளன. இவ்வாறு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளும் மக்களுக்குக் கிடைக்கப் பாடுபடுவேன்.
தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தவறான கருத்து சமூகத்தில் நிலவுகிறது. அந்தக் கருத்தை உடைக்க வேண்டும். எங்கள் மக்கள் படிக்க வந்துவிட்டனர். அடுத்து அதிகாரத்துக்குச் செல்ல வேண்டும். அதை நோக்கி என் பயணம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிதம்பரம் கூறுகையில், அம்பேத்கரின் கனவை எங்கள் பகுதியைச் சேர்ந்த துர்கா சட்டம் படித்து நிறைவேற்றியுள்ளார். அவர் எங்கள் பகுதியைச் சேர்ந்த முதல் சட்டப் பட்டதாரி என்பதால் அவரை குதிரை மீது அமர்த்தி வரவேற்பு அளித்தோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT