Published : 27 Dec 2022 06:10 PM
Last Updated : 27 Dec 2022 06:10 PM
கொச்சி: கேரள மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக 55 வயது நபர் ஒருவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். அதோடு அவருக்கு நிமோனியா பாதிப்பும் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது நுரையீரலில் சிக்கிய மட்டன் போட்டிக்கறிதான் இதற்கு காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்து, அதை அகற்றியுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இதனால் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமும் இருந்துள்ளது. அவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், பல ஆன்டி-பயோடிக் மருந்துகளை விழுங்கியும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது.
அதே நேரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. இந்தச் சூழலில் அண்மையில் அவர் கொச்சியில் உள்ள கொலஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிடி ஸ்கேன் மற்றும் மூச்சுக்குழாய் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். அதில் அவரது வலது நுரையீரலில் வழக்கத்திற்கு மாறான ஒன்றை மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.
தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக அம்ரிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு நுரையீரல் நிபுணரும், மருத்துவருமான டிங்கு ஜோசப், சிக்கலான மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதை அகற்றியுள்ளார்.
பின்னர் அதை நோயாளியிடம் காட்டிய போதுதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பிட்ட மட்டன் போட்டிக்கறி என்றும், அதன் பின்னரே தனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது எனவும் அவர் விவரித்துள்ளார். 3 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அந்த நோயாளி வீடு திரும்பியுள்ளார். அவர் தற்போது பூரண குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு பெரியவர்களுக்கு ஏற்படுவது அரிது என்றும், தூக்கம் அல்லது தன்னிலை மறந்த நேரத்தில் இது நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT