Published : 16 Dec 2022 04:10 AM
Last Updated : 16 Dec 2022 04:10 AM
திருச்சி: மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் தனது மகன் எழுதிய கடிதத்தால் மனம் மாறி மது உள்ளிட்ட போதைப் பழக்கத்திலிருந்து மீண்ட தந்தையை, பள்ளியில் காலை வழிபாட்டு நிகழ்ச்சியில் தேசியக் கொடியேற்ற வைத்து பள்ளி நிர்வாகம் கவுரவப்படுத்தியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மாதம் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 278 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம், தனது தந்தை கருப்பையாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக புகையிலை, மது போன்றவற்றை பயன்படுத்தி வருகிறீர்கள். இதனால் தினமும் அம்மாவிடம் சண்டையிட்டு வருவதால், எனக்கு படிப்பதில் ஆர்வம் குறைகிறது. உங்கள் ஆசைப்படி நான் நன்றாக படிக்க வேண்டும் என்றால், நீங்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்’’ என எழுதியிருந்தார்.
இதை படித்து பார்த்த மாணவரின் தந்தை கருப்பையா மனம் மாறி, கடந்தஒரு மாதமாக மது, புகையிலை பயன்பாடு போன்ற பழக்கத்தைக் கைவிட்டுவிட்டார். இதையறிந்த பள்ளித் தலைமையாசிரியர் ராஜசேகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவரின் தந்தை கருப்பையாவை நேற்று பள்ளிக்கு வரவழைத்து, அவருக்கு புத்தாடை வழங்கி அணிய வைத்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் நடந்த காலைவழிபாட்டு நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்ற வைத்து கவுரவப்படுத்தினர்.
இது குறித்து சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பள்ளி மாணவர்களிடையே பொது சிந்தனை, நல்லறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாணவர் ஸ்ரீராம்எழுதிய கடிதத்தால், அவரது தந்தைபோதைப் பழக்கத்தை கைவிட்டதை அறிந்து, அவருக்கு பள்ளியின்காலை வழிபாடு கூட்டத்தில் சால்வைஅணிவித்து, தேசியக் கொடி ஏற்ற வைத்து கவுரவப்படுத்தினோம். இதுபோன்ற நிகழ்வுகள் கெட்ட பழக்கம் உடைய பெற்றோருக்கு கடிவாளம் போடுவது மட்டுமின்றி, மாணவர்கள் சமுதாயத்தில் புத்துணர்வை ஏற்படுத்தும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT