Published : 13 Dec 2022 04:20 AM
Last Updated : 13 Dec 2022 04:20 AM
புதுக்கோட்டை: சிறார் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதை மறைப்போர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா பேசியது:
பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நேரடியாக உடல் ரீதியாக குழந்தைகளை பாலியல் தொந்தரவு கொடுக்காமல், ஆபாசமான படங்களை அனுப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதும் குற்றம்தான்.
யார் பாலியல் தொல்லை அளித்தாலும், அதுகுறித்து பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ, உறவினர்களிடமோ தயக்கமின்றி தெரிவிக்கலாம். குழந்தை பாலியல் குற்றத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிந்தும், அதை மறைக்க முயன்றால், யாராக இருந்தாலும் அவர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் மறுத்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட குழந்தையை சீருடை இல்லாத, சாதாரண உடை அணிந்த பெண் காவலர்கள் விசாரிக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கு அருகில் உள்ள நீதிபதியிடம் காவல் துறையினர் விரைந்து அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், இலவச சட்ட ஆலோசனைகள் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். 24 மணி நேரத்துக்குள் குழந்தையை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல, அந்தக் குழந்தைக்கு தேவையான பாதுகாப்பு குறித்து அந்தக் குழு விரைந்து முடிவெடிக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையின் போது குழந்தைகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட முடியாது. விசாரணையின்போது குழந்தைக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கவும், வழக்கு முடியும்போது அரசிடம் இருந்து நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவில், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி.எம்.வசந்தி, மாவட்ட குடும்ப நல நீதிபதி எஸ்.ஜெயந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி டி.ஜெயகுமாரி ஜெமி ரத்னா, கீரனூர் சார்பு நீதிபதி பி.சுபா, மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கே.இளமாறன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.அனிதா, குழந்தைகள் பாதுகாப்புக் குழுமத் தலைவர் கே.சதாசிவம், கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, காவல் ஆய்வாளர் ஜி.கலைவாணி வரவேற்றார். மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் யோகமலர் தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT