Published : 07 Dec 2022 12:00 AM
Last Updated : 07 Dec 2022 12:00 AM
புதுச்சேரி: அக்காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து, தற்போது இளையோரால் மறக்கத் தொடங்கிய கார்த்திகை மாவலியை வருங்காலத்தினர் தொடர புதுச்சேரியில் புது முயற்சி எடுத்துள்ளனர்.
கார்த்திகை தீப நன்னாளில் தீபஒளியில் ஊர் முழுவதும் பிரகாசிப்பது வழக்கம். காத்திகைத் தீப நாளில் ‘மாவலி’ சுற்றுதல் என்ற விளையாட்டு குழந்தைகளிடத்தில் நிகழும், பனம் பூக்கள் மலரும் காம்பை நன்கு காய வைத்து, தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள். பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்து காட்டன் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள்.
பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள். இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரி நட்சத்திரங்கள் பறப்பதுபோல் காட்சிதரும். மாவலிக்கு கார்த்திகைப்பொறி என்ற பெயருண்டு.
புதுச்சேரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் இக்காட்சியை அதிகளவில் முன்பு பார்க்க முடியும். திருவண்ணாமலை கோயிலில் மகா தீபம் ஏற்றும் பெரிய கார்த்திகைத் தொடங்கி மூன்று நாட்களுக்கு வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடுகள் மும்முரமாக நடக்கும். அப்போது தெருக்களில் மாவலி சுற்றுதல் நடக்கும். தற்போது இம்முறை மறைந்து வருகிறது. எனினும் கிராமங்களில் விடாமல் இதை செய்வதை காணலாம்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், "பட்டாசு வாங்க செலவு அதிகம். கார்த்திகைக்கு பொருள் செலவு குறைவு. மகிழ்ச்சி அதிகம். வெளிச்சத்தோடு இருப்பது மனமகிழ்ச்சி தரும். இந்த மூன்று நாட்களும் இரவு நேரங்களில் பனம்பூவை சுட்டு அதை தூளாக்கி துணியில் கட்டி, பனை ஓலை காம்பை மூன்றாக பிளந்து அதில் பனம்பூ கரித்தூள் திணித்த பையை கட்டி நெருப்பு வைத்து, வீட்டில் உள்ளவர்கள் சுற்றுவோம். கார்த்திகை சுற்றுவதால் பீடைகள் நீங்கும். மனசு புத்துணர்ச்சிபெறும். ஒளியால் வாழ்க்கை பிரகாசிக்கும். அத்துடன் ஒளி வடிவில் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான் என்பது ஐதீகம். பெற்றோர் இதை சொல்லி தந்து ஊக்கப்படுத்தினால் அடுத்த தலைமுறைக்கும் மாவலி சுற்றுதல் தெரியும். மறையாமல் நீடிக்கும்" என்றனர் சந்தோஷத்துடன்.
மாவலியை இளையோரிடம் கொண்டு சென்று வருங்காலத்தில் இப்பாரம்பரியத்தை கொண்டு செல்ல புது முயற்சியை புதுச்சேரியில் எடுத்திருந்தனர். மாவலி திருவிழா என்று லாஸ்பேட் விமான தளம் அருகே இன்று இரவு கொண்டாடினர். இது மரபு வழி தமிழர் விளையாட்டு என்று குறிப்பிட்டு பலரும் மாவலி சுற்ற ஏற்பாடு செய்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT