Published : 02 Dec 2022 04:07 AM
Last Updated : 02 Dec 2022 04:07 AM

எய்ட்ஸ் நோயால் தற்போது யாரும் இறப்பதில்லை: மதுரை அரசு மருத்துவமனை டீன் தகவல்

மதுரை: எய்ட்ஸ் நோயால் தற்போது யாரும் இறப்பதில்லை என்று மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவமனை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் அனீஷ் சேகர், மருத்துவமனை டீன் ரத்தினவேலு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன் குமார், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாவட்ட திட்ட மேலாளர் பி.ஜெயபாண்டி உட்பட பலர் எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவமனை டீன் ரத்தின வேலு பேசியதாவது: 1992-ம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த சிகிச்சை முறைகள் இல்லை. 1995-ம் ஆண்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு யார் சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மிகப் பெரிய விவாதம் நடந்தது. அந்த அளவுக்கு உயிர்க்கொல்லி நோயாக எய்ட்ஸ் பார்க்கப்பட்டது.

ஆனால் அண்மையில் கண்டறியப்பட்ட மருந்துகளால் எய்ட்ஸூம் மற்ற நோய்களைப்போல் ஒரு நோய் என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். ஏஆர்டி மையத்தில், அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயால்தற்போது யாரும் உயிரிழக்கவில்லை என்றார். நிகழ்ச்சியில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் ஆர்.செல்வராஜ், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் வி.தனலெட்சுமி, ஏஆர்டி மருத்துவ அலுவலர் ஜி.ரஞ்சித் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ச.விசாகன் கையெழுத்து இயக்கத்தையும், விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார். அரசு, தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் ராஜஸ்ரீ, நலப் பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் ராமச்சந்திரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மேற்பார்வையாளர் ஜெசிந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x