Published : 17 Nov 2022 07:39 PM
Last Updated : 17 Nov 2022 07:39 PM

10 ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றி: கூகுளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநரின் சக்சஸ் கதை

அட்வின் நெட்டோ

தோல்விகளே வெற்றிக்கான படிகள் என சொல்வது உண்டு. அதை அப்படியே நிஜ வாழ்க்கையில் அப்ளை செய்து வாகை சூடியுள்ளார் தொழில்நுட்ப வல்லுநரான அட்வின் நெட்டோ. இதோ அவரது சக்சஸ் கதை. விடாமுயற்சியின் மூலம் கிடைத்த விஸ்வரூப வெற்றி இது.

எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கல்விக் கூடத்தில் படிக்க வேண்டும், சிறந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு இருக்கும். அதனை சிலர் தங்களது வாழ்வின் லட்சியமாகவே விரட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அட்வின் நெட்டோ. இவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என ஆசை. அதனால் அந்நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டு காலம் பணிக்காக முயன்று ஒரு வழியாக இப்போது வெற்றி பெற்றுள்ளார்.

2007-ல் அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்கில் பட்டம் முடித்த அவர், சில சிறிய நிறுவனங்களில் டிசைனராக பணியாற்றி வந்துள்ளார். ஒருகட்டத்தில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமென விரும்பியுள்ளார். அதன்படி கடந்த 2013 முதல் அதற்கான முயற்சியை அவர் தொடங்கி உள்ளார். இப்போது கூகுளில் யுஎக்ஸ் டிசைனாராக அவர் பணியாற்றி வருகிறார். இது குறித்து அவரே சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

“பெரும்பாலும் சமூக வலைதளங்களில் ஒரு சிறந்த கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம். அதன் பின்னால் உள்ள முயற்சியை நாம் கவனிக்க வேண்டும். 2013 முதல் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக முயற்சித்து வருகிறேன். ஆண்டுதோறும் தவறாமல் விண்ணப்பித்து விடுவேன். ஒவ்வொரு ஆண்டும் எனக்கான அழைப்பு வராதபோது, நான் என்ன தவறு செய்தேன் என்பதை கவனிப்பேன். எனது பயோடேட்டா தொடங்கி பலவற்றையும் அடுத்தடுத்த முயற்சிகளில் மாற்றுவேன். ஒரு கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் நான் பட்டம் பெறாதது கூட காரணமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அது என் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், எனது பயோடேட்டாவை மேம்படுத்தும் கட்டுப்பாடு என் வசம் இருந்தது. பல தோல்விகளுக்கு பிறகு இன்று உங்கள் முன்பு வேலையுடன் நிற்கிறேன்.

இந்த முயற்சியில் நான் கற்றது இதுதான்...

  • முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். இதில் மேம்பாடும் அவசியம். அதை செய்தால் எண்ணியதை நாம் நிச்சயம் அடைவோம்.
  • கூகுளில் பணிக்கு சேர ஃபேன்சியான டிகிரி எல்லாம் தேவை இல்லை. நீங்கள் கற்ற விஷயத்தில் கைதேர்ந்தவராக இருந்தால் போதும்.
  • நமக்கு சாதகமான விஷயங்கள் எதுவும் நடைபெறவில்லை எனில் பொறுமை அவசியம். அந்த சமயங்களில் நாம் கட்டுப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
  • டிசைனிங் வேலையை தவிர்த்து கவித்துவமான வேலைகள், பரிசோதனை முயற்சியிலான டிசைன்கள் மற்றும் பிளாகும் எழுதுவேன். கூகுள் நிறுவனம் வாரத்திற்கு 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வேலைக்கான விண்ணப்பங்களை அலசும். அதில் 144 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். அதனால் இங்கு நம் ஆர்வங்களை வெளிப்படுத்துவது அவசியம்.
  • முக்கியமாக இதற்கு பிறரின் உதவி அவசியம். நிறைய பயிற்சியும் அவசியம்.
  • கூகுளில் நான் பணியாற்ற விரும்பியதற்கு காரணம் என்னவென்றால், இந்த நிறுவனத்தின் மூலம் கோடான கோடி மக்களுக்கு தேவையானதை எனது பணி பங்களிப்பின் மூலம் கொடுக்க முடியும் என்பதால் தான்” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x