Published : 17 Nov 2022 04:45 AM
Last Updated : 17 Nov 2022 04:45 AM
புதுக்கோட்டை: உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவ.17-ம் தேதி, குறைமாத குழந்தைகள் விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த தினத்துக்கான கருப்பொருள் ‘பெற்றோரின் அரவணைப்பு- ஒரு குறைமாத குழந்தைக்கு சக்தி வாய்ந்த சிகிச்சை’ என்பது ஆகும்.
இது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஆர்.பீட்டர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் நிறைவடைவதற்குள் பிறக்கும் குழந்தைகள்தான் குறைமாத குழந்தைகள். பிறக்கும் குழந்தைகளில் 10 சதவீதம் குறைப் பிரசவத்தில்தான் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நீண்ட நாட்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.
உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழக்க நேரிடும். 5 வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளில், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளே அதிகம். குறை மாதத்தில் பிறந்து, காப்பாற்றப்படும் குழந்தைகளில் சிலர், மூளை மற்றும் நுரையீரல் போன்ற பிரச்சினைகளோடும், பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடுகளைக் கொண்டவர்களாகவும் இருப்பர். ஆனால், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிறப்பான சிகிச்சை வழங்குவதன் மூலம் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற முடியும்.
குறிப்பாக, காப்பாற்றப்படும் குழந்தைகளுக்கு பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு, தீவிர சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படும் குறைமாத குழந்தைகளின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு வழங்கப்படும் முக்கிய சிகிச்சைகளில் ஒன்று, குழந்தைகளை பெற்றோர் அரவணைத்து பராமரிக்கும் கங்காரு முறை குழந்தை பராமரிப்பு. கங்காரு, தனது குட்டி வளரும் வரை இயற்கையாக வயிற்றில் அமைந்துள்ள பையில் வைத்துக் கவனித்துக் கொள்வதைப் போன்றது இது.
ஒரு கிலோ முதல் 2 கிலோ வரை எடையுள்ள குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சையை அளிக்கலாம். நாள்பட்ட வியாதிகள் இல்லாத, தனி நபர் சுகாதாரத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர்கள் மட்டுமே இந்த சிகிச்சை முறையைப் பின்பற்ற வேண்டும். மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பில் வழங்கப்படுவதுபோல, வீடுகளிலும் கங்காரு முறை குழந்தை பராமரிப்பை தொடர வேண்டும். குறைமாத குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பே சக்தி வாய்ந்த சிகிச்சை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT