Published : 08 Nov 2022 04:55 PM
Last Updated : 08 Nov 2022 04:55 PM

“நீ ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய்” - வைரலாகும் தாய், மகளின் ஹேர்ஸ்டைல் குறித்த உரையாடல்

பெரும்பாலும் பெண்களின் அலங்காரத்தில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளுவது சிகைக்கு (தலைமுடி) தான். பெரியவர்கள் முதல் சிறுமிகள் வரை இதில் விதிவிலக்கு இல்லை. சாதா கொண்டை, மீனாட்சி கொண்டை, குளிச்ச ஜடை, அலங்கார ஜடை, போனிடெயில், ஃப்ரீ ஹேர் என அன்று தொடங்கி இன்று வரை வகைக்கொரு பெயரும் அலங்காரமும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தாய் - மகள் ஹேர்ஸ்டைஸ் உரையாடல் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தனக்கு எப்படியான சிகையலங்காரம் வேண்டும் தனது தாய்க்கு சிறுமி ஒருத்தி மிகவும் பொறுமையாய் அறிவுறுத்த, அவளை விட பொறுமையாய் மகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் தாய் என்ற அந்த வீடியோ கடந்த மாதத்தில் பகிரப்பட்டாலும் தற்போது இணையத்தில் அதிகமான பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

'திஹன்னாஃபேமிலி' என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு கையில் சின்ன பொம்மை, மறுகையில் ஏதோ ஒரு பிஸ்கெட்டை வைத்தபடி அழகு பொம்மையாக சிறுமி ஒருவர் நிற்கிறாள். அவளுக்கு பின்னாள் சிறுமியின் தாய் நின்று சிறுமிக்கு தலைவாரிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் சிறுமியின் விரும்பியது போல தாய் தலைவாரி விடவில்லை எனக் குற்றம்சாட்டும் சிறுமி தனக்கு இரண்டு பக்கமும் இறக்கை போல இருக்கும் படி ஜடை பின்னவேண்டும் இதைத்தானே நேற்று நான் உன்னிடம் சொன்னேன் நீ ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாய் என்கிறாள்.

அதற்கு தனக்கு புரியவில்லை என்று கூறு மீண்டும் மாற்றி பின்னிவிடுகிறார். ஆனால் இரண்டு பக்க கொண்டைக்கு பதிலாக கூடுதலாக பின்பக்கமும் ஒரு கொண்டை வைத்துவிடுகிறார். அதைத் தடவிப் பார்த்து தனக்கு அப்படி வேண்டாம் எனச் சிறுமி கூற, அதற்குள் சிறுமியின் உடன்பிறப்பு அழுது விடுகிறது. குழந்தையை சமாதானப்படுத்தி விட்டு மீண்டும் பெரியவளுக்கு தலைவாரும் படலம் தொடங்குகிறது. இதுதான் இன்றைக்கு கடைசியான அலங்காரம் என கூறியபடி தொடங்கும் அந்த அம்மா இந்த முறை தான் விரும்பிய படியும் சிறுமி கேட்டபடியும் ஜடை போட, இதுதானே நான் கேட்டது என கேள்வி கேட்டு கடைசியில் சிறுமி சமாதானமாகி அம்மாவுக்கு நன்றி சொல்கிறாள். இவர்களில் யார் பொறுமைசாலி என நீங்களே சொல்லுங்கள்.

இந்த வீடியோவை இதுவரை 2.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 1.32 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பல பயனர்கள் அந்த தாயின் பொறுமையை வெகுவாக புகழ்ந்துள்ளனர். ஒரு பயனர், அந்த தாய் தன் மகளுக்கு என்ன மாதிரி ஜடை பின்னவேண்டும் என்பதை தெரிவிக்க சுதந்திரம் கொடுத்து கடைசியில் அதன்படியே பின்னியும் விடுகிறார். மிகவும் நல்ல அம்மா என்று தெரிவித்துள்ளார். இரண்டாமவர், கடவுளே இந்த அளவு பொறுமையும், தனக்கு வேண்டியதை கூறும் குழந்தையும் வேண்டும். என்னால் இது முடியாது, ஆனாலும் வியப்படைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது பயனர், எப்படி உங்களால் இவ்வளவு பொறுமையாக அந்த குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முடிகிறது. நான் அடிக்கடி என் குழந்தைகளிடம் பொறுமையிழந்து விடுகிறேன். நான் மிகவும் உவகையடைகிறேன். அந்த தாய் சிறப்பானவர் என்று தெரிவித்துள்ளார்.

நான்காவது நபர், அந்தச் சிறுமி எனக்கு எனது 3 வயது குழந்தையை நினைவூட்டுகிறாள். அவர்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரிகிறது. நான் தான் புரியாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x