Published : 07 Nov 2022 09:00 AM
Last Updated : 07 Nov 2022 09:00 AM
ஈரோடு: பருவமழை பெய்து வரும் நிலையில், வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. அவற்றை எதிர்கொள்வது குறித்து, பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கண்ணுசாமி கூறியதாவது:
மழைக்காலத்தில் கொசுக்களால் உருவாகும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க, நொச்சி இலை கொண்டு புகை போடலாம். சளி, தொண்டை வலியைப் போக்க, குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 10 துளசி இலைகளைப் போட்டு ஆற வைத்து குடிக்கலாம். ஐஸ்கிரீம், குளிர்பானம், சுகாதாரமற்ற, பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி உருவாக…: துண்டாக வெட்டப்பட்ட ஒரு பச்சை மிளகாய், இரண்டு மிளகளவு சீரகம், மஞ்சள் தூள், கல் உப்பு ஆகியவற்றை 200 மில்லி நீரில் போட்டு, 3 நிமிடம் கொதிக்கவைத்து தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நிலவேம்பு கசாயம், சுக்குமல்லி, காய்கறி, புதினா, மிளகு, பட்டாணி, முருங்கை இலை, வெற்றிலை - மிளகு கலந்த சூப் போன்றவற்றை குடிக்கலாம். மிளகு, பூண்டு, மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால், அவற்றை அதிகமாக பயன்படுத்தலாம்.
இரவு சூடான பாலுடன் அரை டீ ஸ்பூன் மஞ்சள், மிளகுதூள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டை வலி சரியாகும். இருமல், சளி, நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆடாதொடை கசாயம் குடிக்கலாம். மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினைக்கு துளசி, மஞ்சள், நொச்சி கலந்த நீரில் ஆவி பிடிக்கலாம். காலில் சேற்றுப்புண் ஏற்படும் போது, மஞ்சள், கடுக்காய் தூளை அரைத்து தடவினால் குணமாகும்.
தேங்காய் எண்ணெய்யை லேசாக சுட வைத்து, சூடு ஆறிய பின்பு, 10 கிராம் பச்சைக் கற்பூரத்தை கலந்து அந்த எண்ணெய்யை மூட்டுகளில் தேய்ப்பதன் மூலம் வலி குறையும். அரசு சித்த மருத்துவமனைகளில் கற்பூராதி தைலம் இலவசமாகக் கிடைக்கிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT