Published : 05 Nov 2022 04:00 PM
Last Updated : 05 Nov 2022 04:00 PM

பேட்டரி முதல் ஏர் ஃபில்டர் வரை: மழைக்கால கார் பராமரிப்புக் குறிப்புகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்த காலகட்டத்தில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமம். அதேசமயம் வாகனங்களை உரிய அளவில் பராமரித்து வைத்திருப்பதும் அவசியம். மழைக் காலங்களில் திறமை மிகு வாகன ஓட்டிகளுக்குக் கூட வாகனங்களை ஓட்டுவது மிகவும் சவாலான விஷயமே. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் சாலைகளில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

குரூயிஸ் கன்ட்ரோல்: சாலையில் உள்ள அறிவிப்புப் பலகைகள் சரிவர தெரியாமல் போவதும் வாகன ஓட்டிகளின் கணிப்புகளைப் பொய்யாக்கி விபத்துக்கு வித்திடுகிறது. இதனால் மழைக் காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் குரூயிஸ் கன்ட்ரோல் எனும் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குரூயிஸ் கன்ட்ரோல் முறையை தேர்வு செய்வதால் வாகனங்கள் வேகமாக செல்லும். இதுவும் விபத்துகளுக்குக் காரணமாகிறது. விபத்து நடப்பதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதைத் தவிர்த்துவிடலாம்.

கார் பரமாரிப்பு அவசியம்: வாகனங்களை எச்சரிக்கையோடு ஓட்டுவதோடு வாகனத்தை சரிவர பராமரித்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது.

  • கார்களின் முன்புற கண்ணாடி மற்றும் வைபர் எனும் மழை நீர் துடைப்பான் ஆகியவை சரிவர உள்ளனவா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
  • பெரும்பாலான விபத்துகளுக்கு கார்களின் டயர்களே காரணமாகிறது. இதனால் டயர்களை பரிசோதிப்பது மிகவும் அவசியம். தேய்ந்துபோன டயர்களை மாற்றிவிட வேண்டும்.
  • முகப்பு விளக்குகளின் ஒளி அளவை சோதிக்க வேண்டும். மழைக் காலங்களில் போதிய வெளிச்சமின்மையும் விபத்துகளுக்குக் காரணமாகிறது.
  • அனைத்துக்கும் மேலாக பேட்டரியை பரிசோதித்து தேவையெனில் பேட்டரி இணைப்பின் மீது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தவும். மழை காரணமாக இணைப்புப் பகுதிகள் துருபிடிப்பதை இது தடுக்கும். அத்துடன் பேட்டரி செயலிழப்பைக் குறைக்கும்.
  • குறிப்பாக, வாகனத்தின் மீது செய்யப்பட்ட காப்பீடு குறித்தும் கவனம் செலுத்தலாம். மழைக்காலத்துக்கென சில பாதிப்புகளைத் தவிர்க்க கூடுதல் காப்பீடு செய்வதும் அவசியம்.

பிரச்சினைகளும் தீர்வுகளும்

பேட்டரி: பொதுவாக நாம் மழைக் காலங்களில் கார் ஓட்டுவதைத் தவிர்ப்போம் அல்லது குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவோம், அவ்வாறு குறைந்த அளவு பயன் படுத்தும்போது இன்ஜினின் இயக்கமும் குறைவாக இருக்கும். அதனால் பேட்டரியில் தேவையான அளவு மின்சாரம் சேமிக்க முடியாமல் போவதால் சில நேரங்களில் இன்ஜினை அணைத்து விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது ஸ்டார்ட் ஆகாமல் போகிறது. நாம் மழை காலங்களில் காரைப் பயன் படுத்தாவிட்டாலும் தினமும் ஸ்டார்ட் செய்து ஒரு பத்து நிமிடம் வரை இன்ஜினை இயக்க செய்வதால் பேட்டரியில் மின் அளவு குறையாமல் இருக்கும்.

முகப்பு விளக்கு: மழைக் காலங்களில் முகப்பு விளக்கு எரியாமல் போய் விடும். இது பெரும்பாலும் முகப்பு விளக்கில் வெளிச்சம் அதிகம் பெற வோல்ட் அதிகமாக உள்ள பல்பை பயன்படுத்துவோரது கார்களில் நிகழும், ஏனென்றால் அதற்காக பயன் படுத்தும் Relay-ல் தண்ணீர் பட்டு விட்டால் ஷார்ட் ஆகி பியூஸ் ஆக வாய்ப்புகள் அதிகம், எனவே ரிலேயில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கூலிங் ஃபேன்: மழைக் காலங்களில் கூலிங் ஃபேன் இயங்காமல் போவதும் உண்டு. இது எதனால் நிகழ்கிறது என்றால் தண்ணீர் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டும் போது Bumper grill வழியாக தண்ணீர் வேகமாக கூலிங் ஃபேன் உள்ள திசையை நோக்கி வரும், அப்படி வந்த தண்ணீர் கூலிங் ஃபேன் மோட்டார் மீது படும் போது ஃபேன் மோட்டார் ஷார்ட் ஆக வாய்ப்புகள் அதிகம். ஆக, மழை காலங்களில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மெதுவாக வாகனம் ஓட்டுவது நல்லது.

பஞ்சர் ஜாக்கிரதை: மழைக் காலங்களில் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகும். இது அதிகம் செயல்படுத்தப்படாத கார்களில் அதிகமாக நிகழும். ஏனென்றால் டயர் அதிக நேரம் தண்ணீரில் இருப்பது ஒரு காரணம். அது மட்டும் இல்லாமல் ஓடாமல் உள்ள டயரில் கல் மற்றும் கண்ணாடி போன்றவை எளிதில் உள்ளே சென்று டியூபை பஞ்சர் செய்து விடும். ஆக, மழைக் காலங்களில் கரடு முரடான சாலைகளில் மெதுவாக போவது சிறந்தது.

இன்ஜினை இயக்குவது எப்படி? - தண்ணீர் மிக அதிகம் தேங்கியுள்ள பகுதியில் (சைலன்ஸர் வரை) வாகனம் செல்லும் போது இன்ஜின் ஆப் ஆகி விட்டால் திரும்பவும் ஸ்டார்ட் செய்யக் கூடாது. தண்ணீரில் இருந்து வெளியே நகர்த்தி பின்பு இன்ஜினில் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்த்து விட்டு தண்ணீர் புகாமல் இருந்தால் இன்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு இயக்கலாம் இதுவே சரியானது.

ஏர் ஃபில்டர் உஷார்: மழைக் காலங்களில் அடிக்கடி ஏர் ஃபில்டரை பரிசோதிப்பது சிறந்தது. ஏனென்றால் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வாகனம் செல்லும்போது தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. இதில் தண்ணீர் போனால் ஏர் ஃபில்டரில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x