Published : 04 Nov 2022 04:25 AM
Last Updated : 04 Nov 2022 04:25 AM
திண்டுக்கல்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் அருகே சுடுமண்ணால் தயாரிக்கப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன.
நாடு முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு டிச.6-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாகவே ஒரு வாரம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இதனால் விளக்கு தயாரிப்போர் தயார் செய்தும் விற்பனைக்கு அனுப்பமுடியாதநிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த ஆண்டு இயல்புநிலை திரும்பியுள்ளதால் தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாகவே சுடுமண் விளக்குகள் தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
திண்டுக்கல்லைச் சுற்றி யுள்ள கிராமப்பகுதிகளில் ஆண்டு தோறும் சுடுமண்ணால் பொம்மைகள், விளக்கு மாடங்கள், விநாயகர் சிலை, தீபவிளக்குகள், கொலு பொம்மைகள் என அந்தந்த விழா, திருநாளுக்கு ஏற்ப தயாரித்து விற்பனை செய்கின்றனர். தற்போது கார்த்திகை தீபத் திரு நாளுக்கு ஒரு மாதமே உள்ளதால் பல்வேறு வகையான விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கண்மாய், குளத்தில் இருந்து எடுத்து வரப்படும் மண்ணைக் கொண்டு லிங்க விளக்கு, தேங்காய் விளக்கு, ஐந்துமுக விளக்கு, நட்சத்திர விளக்கு, இரண்டடுக்கு விளக்கு, லட்சுமி விளக்கு, குபேர விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, அன்ன விளக்கு, குத்துவிளக்கு ஆகியவற்றைத் தயாரிக்கின்றனர்.
தொழிலாளர்களின் கைவண்ணத்தில் இந்த விளக்குகள் பல்வேறு வடிவங்களில் தயாராகின்றன. இவற்றை காளவாசலில் சுட்டு எடுக்கின்றனர். பின்னர் இவற்றுக்கு வண்ணம் தீட்டுகின்றனர். இறுதிவடிவம் கொடுக்கப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சுடுமண் பொம்மைகள், விளக்குகள் தயாரித்துவரும் நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த கஜேந்திரன் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு வியாபாரம் நல்லமுறையில் உள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால் உற்பத்தியை முன்னதாகவே தொடங்கிவிட்டோம். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விளக்குகளை மொத்தமாக விற்பனைக்கு வாங்கிச்செல்கின்றனர்.
கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் பயன்படுத்தும் விளக்குகள் போல தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளனர். அந்தந்த மாநிலத்துக்கேற்ப அவர்கள் விரும்பும் விளக்குகளைத் தயார் செய்து தருகிறோம். ஒரு ரூபாய் முதல் 50 ரூபாய் வரை, சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை மொத்தமாக விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT