Published : 21 Oct 2022 01:52 PM
Last Updated : 21 Oct 2022 01:52 PM

இது திகில் பட ஃபர்ஸ்ட் லுக் அல்ல... ஓர் எறும்பின் முகம்: வாகை சூடிய புகைப்படம்

எறும்பின் முகம் - க்ளோஸ் அப்பில்

எறும்பு ஊறுது என்று மெல்லத் தட்டிவிட்டுக் கடந்திருப்போம். ஆனால், இனி அடுத்தமுறை தட்டிவிடும்போது இந்த முகத்தை சற்றே நினைவில் கொண்டுவந்து பார்க்கவும். ஆம், ஓர் எறும்பின் முகத்தை க்ளோஸ் அப் ஷாட்டில் புகைப்படம் பிடித்து உலக மக்களின் இதயங்களையும் 2022 Nikon Small World Photomicrography போட்டியில் பரிசையும் வென்றிருக்கிறார் ஒரு புகைப்படக்காரர். லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த அவரின் பெயர் யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ். அவர் பெயர் உச்சரிப்பு கடினமாக இருந்தாலும் அவருக்கு வெற்றி தேடித்தந்த புகைப்படம் எளிதாக உள்ளத்தில் நுழைந்துவிடுகிறது.

நிகான் ஸ்மால் வேர்ல்டு போட்டோமைக்ரோகிராஃபி புகைப்பட போட்டியானது மனிதர்கள் தங்களின் சாதாரண கண்களால் பார்க்க இயலாதவற்றை புகைப்படம் எடுப்பவர்களில் தேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் புகைப்படங்களை அனுப்பியிருக்க யூஜெனின்ஜஸும் அனுப்பியிருந்தார். மொத்தம் 57 புகைப்படங்கள் இமேஜஸ் ஆஃப் டிஸ்டின்க்‌ஷன் என்று தேர்வாகியிருந்தது. இதில் எறுப்பின் முகத்தை மைக்ரோஸ்கோப்பின் கீழ் 5 மடங்கு பெரிதுப்படுத்தி எடுக்கப்பட்ட யூஜெனின்ஜஸின் புகைப்படமும் பரிசைத் தட்டிச் சென்றது. அந்தப் புகைப்படத்தில் சிவப்பு நிற கண், தங்கம் போல் தகிக்கும் கொடுக்குகள் இருக்கின்றன.

இந்தப் படம் சமூக வலைதளத்தில் வெளியாக இணையவாசிகள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். பலரும் பலவிதமான பின்னூட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பதிவர், “இது என்ன திகில் படத்தின் காட்சியா? இல்லை. இது ஓரு எறும்பின் உண்மை முகம். இனி இரவு முழுக்க நீங்கள் இதை நினைத்து அஞ்சுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு பதிவரோ “ட்ராகன்கள் எல்லாம் இன்னும் அழியவில்லை. அவை அளவில் சுருங்கி எறும்பாகிவிட்டதோ” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ஆங்கிலத்தில் ”giANTS!” என்று குறிப்பிட்டு தனது ஆச்சர்யத்தைப் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் இணையவாசிகள் இந்தப் படத்தைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போட்டியில் ஜெனீவா பல்கலைக்கழகத்தின் க்ரெகோரி டிமின் எடுத்த மடகாஸ்கர் கெக்கோவின் க்ளோஸ் அப் புகைப்படம் தான் முதல் பரிசை வென்றுள்ளது. நிகான் நிறுவனம் கடந்த 48 ஆண்டுகளாக இந்த புகைப்படப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு போட்டிக்கு மொத்தமாக 1300 படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் 57 புகைப்படங்கள் இமேஜஸ் ஆஃப் டிஸ்டின்க்‌ஷன் என்று தேர்வாகியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x