Published : 20 Oct 2022 05:37 PM
Last Updated : 20 Oct 2022 05:37 PM
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது அவரது ரசிகர்கள் அளப்பரிய அன்பைப் பொழிவது வழக்கமான ஒன்றுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரை பார்க்க ஒரு ரசிகர் நடைபயணமாக பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றிருந்தார். இது அவரது நெஞ்சை கவருவதற்காக மேற்கொள்ளும் செயல். அப்படி ஒரு செயலை ஒருவர் இப்போது செய்துள்ளார்.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 35 வயது பெண் ஒருவர், தோனியின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார். அது இப்போது தோனி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் விஜயவாடாவை சேர்ந்தவர். அவருக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது கடந்த 2010 வாக்கில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளை சிகிச்சைக்காக அணுகியுள்ளார். ஆனால் அவரது பாதிப்புக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என தெரிகிறது. கடந்த 2015 வாக்கில் சென்னை - காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அணுகியுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். அவரது நிலையை கருத்தில் கொண்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியலில் அவருக்கு முன்னுரிமை கொடுப்பட்டது.
வேலூர் அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த நபரது இதயம் இவருக்கு பொருந்தி உள்ளது. அதன்படி வேலூரில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரம் 15 நிமிடங்களில் இதயம் கொண்டுவரப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் இணைந்து அந்த பெண்ணுக்கு 4 மணி நேரம் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தற்போது அவர் பூரண குணம் அடைந்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தோனியின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.
காவேரி மருத்துவமனையின் பிராண்ட் அம்பாசிட்டராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி தான் உள்ளார். அதனால் அந்தப் படம் இப்போது அவர் வசம் சென்று சேர்ந்துள்ளது.
“உறுப்பு தானம் என்பது மிகவும் உன்னதமான செயல், அது உயிர்களைக் காப்பாற்றும். உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் இரண்டாவது முறையாக வாழ்ந்து வரும் ஒருவரிடம் இருந்து வந்துள்ள இந்த வரைபடம் எனது நெஞ்சத்தை மிகவும் கவர்ந்துள்ளது. இது மருத்துவர்களின் முயற்சியால் மட்டுமே சாத்தியம் ஆகியுள்ளது” என தோனி தெரிவித்துள்ளார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!
This has our whole hearts!
— Chennai Super Kings (@ChennaiIPL) October 20, 2022
தகவல் உறுதுணை: PTI நியூஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT