Published : 14 Oct 2022 04:28 PM
Last Updated : 14 Oct 2022 04:28 PM
ஒரு பெண்ணின் கண்ணில் இருந்து 23 கான்டாக்ட் லென்ஸ்களை கண்மருத்துவர் ஒருவர் அகற்றும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கண்கண்ணாடிகள் அணியும் அசவுகரியங்களுக்காகவும், கண்ணாடிகள் முகப்பொலிவை கெடுக்கிறது என்ற காரணத்திற்காகவும் சிலர் கான்டாக்ட் லென்ஸ்கள் அணிவதுண்டு. கருவிழிக்குள் பொருந்தி அதன் ஒரு பகுதி போலத் தெரியும் இந்த கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவதில் அஜாக்கிரதையாக இருந்தால், அதுவே ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
உடலுக்கு வெளியே இருப்பதால் தேவையில்லாத நேரங்களும், தூங்கும்போதும் கண்கண்ணாடியை நாம் கழற்றி வைத்து விட முடியும். கண்களுக்குள் பொருத்தி இருப்பதால் கழற்றி வைக்க மறந்து விடும் கான்டாக்ட் லென்ஸ்கள் சில நேரங்களில் ஆபத்தாகவும் மாறிவிடும். அப்படி ஓர் ஆபத்தை கண் மருத்துவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கண் மருத்துவரான கேத்ரினா குர்தீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவரின் கண் இமைக்குள்ளிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல கான்டாக்ட் லென்ஸ்களை எடுக்கிறார்.
அந்த வீடியோவின் மேலே ஒருவரின் கண்ணில் இருந்து 23 கான்டாக்ட் லென்ஸ்கள் வெளியே வருகின்றன. எனது கிளினிக்கில் எடுத்த உண்மையான வீடியோ இது. தயவு செய்து தூங்கும்போது கான்டாக்ட் லென்ஸ்களை கழற்றி வைத்துவிட்டு தூங்குங்கள் என்ற வாசகங்கள் உள்ளன.
மேலும், இது ஓர் அபூர்வமான சம்பவம். இரவில் தூங்கப்போகும்போது காண்டாக்ட் லென்ஸ்களை கழற்றி வைக்க மறந்து விட்ட ஒருவர், காலையில் வேறு ஒன்றை புதிதாக மாட்டிக் கொண்டுள்ளார். 23 நாட்கள் இது நடந்திருக்கிறது. நேற்று என் கிளினிக்கில் அவரின் கண்களில் இருந்து கான்டாக்ட் லென்ஸ்களை மொத்தமாக எடுத்தேன் என்று கேத்ரினா பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதியப்பட்டதிலிருந்து 2.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 81 ஆயிரம் பேர் வீடியோவிற்கு விரும்பம் தெரிவித்துள்ளனர். பலர் பின்னூட்டத்தில் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆச்சரியத்தில் வாய் பிளந்தேன் எனத் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் மீது இரக்கம் கொண்ட மற்றொரு பயனர், நான் அந்தப் பெண் இனி கான்டாக்ட் லென்ல் அணிய வேண்டாம், கண்ணாடி அணியுங்கள் எனப் பரிந்துரைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT