Published : 04 Oct 2022 04:45 AM
Last Updated : 04 Oct 2022 04:45 AM
கேரளாவில் பிரசித்தி பெற்று விளங்கும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தென்னம் மற்றும் பனங்கருப்பட்டியை ஆண்டுதோறும் ஏராளமானோர் சுவைக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர், பெருமாநல்லூர், அவிநாசி மற்றும் காங்கயம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
இதில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனங்கிழங்கு, பனை ஓலை மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்களை பனைத் தொழிலாளர்கள் சேகரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பனைத் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர், மாவட்டங்களில் உள்ள ஆரம்ப கருப்பட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர்.
திருப்பூரில் 23 சங்கங்கள், கோவையில் 15 மற்றும் ஈரோட்டில் 45 என மொத்தம் 83 ஆரம்ப கருப்பட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மேற்கண்ட 3 மாவட்டங்களில் ஏராளமான பனைத்தொழிலாளர்கள் உள்ளனர்.
குன்னத்தூர் பகுதி தென்னை மற்றும் பனைத்தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘பனையின் முக்கிய உற்பத்தி பொருளான கருப்பட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
உற்பத்தி குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பனங்கருப்பட்டி கிலோ ரூ.188-க்கு விற்பனையானது. பெரும்பான்மை நேரங்களில் ரூ. 120 முதல் ரூ. 140 வரை விற்கும். ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த சீசன்.
ஆனால் ஆண்டு முழுவதும் தென்னங்கருப்பட்டி விற்பனை நடைபெறும். இது தற்போது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. நடப்பு வாரத்தில் கிலோ ரூ.90-க்கு தென்னங் கருப்பட்டி விற்பனையாகிறது.
இதற்கு வாரந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும் அருகில் உள்ள ஈரோடு, கோவை மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி, குன்னத்தூரில் அமைந்துள்ள கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் மூலம், தொழிலாளர்களிடம் பெறப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்தை பயன்படுத்தும் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நலவாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அதே போல் பதிவு செய்த தொழிலாளர்களும், தங்களது பதிவை புதுப்பிக்காமல் விட்டதால், தமிழக அரசு கரோனா நிவாரண நிதியாக அறிவித்த ரூ.1,000 பலருக்கும் கிடைக்க வில்லை’’ என்றார்.
குன்னத்தூரைச் சேர்ந்த ராமசாமி கூறும்போது, ‘‘கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக பதிவு செய்வதும், அதனை புதுப்பிப்பது தொடர்பாக மரம் ஏறும் தொழிலாளர்களிடம் பெரிதாக விழிப்புணர்வு இல்லை.
இதுவே அரசின் நிவாரண உதவி உள்ளிட்டவை கிடைக்காமல் போக முக்கிய காரணம். தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கருப்பட்டி, பெரும்பகுதி கேரளா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டியை விரும்பி சாப்பிடுகின்றனர். அதேபோல் பனங்கருப்பட்டிக்கும் ஒரு பெரிய வியாபாரமே கேரளாவில் உண்டு’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT