Published : 02 Oct 2022 08:29 PM
Last Updated : 02 Oct 2022 08:29 PM
பல நாட்களாகவோ பல மாதங்களாகவோ பல ஆண்டுகளாகவோ கொடிய நோயுடன் போராடிக் கொண்டும், சிகிச்சையிலும் இருக்கும் குழந்தைக்கு நீங்கள் என்ன பரிசளிப்பீர்கள் ? பொம்மைகளா? புத்தகங்களா? சாக்லேட்டுகள்? - சரி, இவை அனைத்தும் அந்தக் குழந்தையை உற்சாகப்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், சிகிச்சையிலிருந்து ஓய்வு எடுக்க விரும்பும் அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சியைத் திரும்பக் கொண்டுவந்து, அவர்களுக்கு நம்பிக்கையின் கதிரை வழங்கக்கூடிய ஒன்று எதுவாக இருக்கும்? மற்ற குழந்தைகளைப் போலவே வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டாட வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுதானே அந்தக் குழந்தைகளுக்கான சிறந்த பரிசாக இருக்க முடியும்!
அத்தகைய சிறந்த பரிசையே மரண வலியுடன் போராடும் குழந்தைகளுக்கு ’கோல்டன் பட்டர்ஃபிளைஸ் சில்ட்ரன் பாலியேட்டிவ் கேர்’ எனும் அறக்கட்டளை இன்று சென்னையில் அளித்துள்ளது. குழந்தைகளுக்கான பேலியேட்டிவ் கேர் எனப்படும் ‘மரண வலி தணிப்புச் சிகிச்சை' சேவையை ஆற்றுவதே இந்தப் பொது தொண்டு அறக்கட்டளையின் நோக்கம். அந்த அமைப்பு முதன்முறையாக, அந்தக் குழந்தைகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் பங்கேற்கும் விதமாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு சுவாராஸியமான விளையாட்டுகள் நிறைந்த கேளிக்கை நிகழ்வை இன்று சென்னையில் நடத்தியது.
இன்று காலை முதல் மாலை வரை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற அந்த நிகழ்வில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு, பாடல், நடன நிகழ்ச்சிகள் அந்தக் குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல்; அங்கே புத்தகங்களும் உணவும் வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு மிக்க நிகழ்வு குறித்து அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டெல்லா ஜாக்குலின் மேத்யூ கூறுகையில், "கடினமான நேரத்தில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால், அது அந்தக் குழந்தைகளை விளையாட்டின் மீது கவனம் செலுத்த வைப்பதன் மூலமே நடக்கும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம். புற்றுநோய், எய்ட்ஸ், இறுதிக்கட்ட உறுப்பு செயலிழப்பு போன்ற தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்க கோல்டன் பட்டர்ஃபிளைஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது" என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT