Published : 28 Sep 2022 05:02 PM Last Updated : 28 Sep 2022 05:02 PM
“உங்களால் கருத்துகளை கொல்ல முடியாது!” - தூக்கு மேடை ஏறிய புரட்சியாளர் பகத் சிங்கும் சில தகவல்களும்
இந்திய விடுதலைக்காக அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து புரட்சிகரமாக குரல் எழுப்பியவர்தான் பகத் சிங். இன்று அவருக்கு பிறந்தநாள். “தனிநபர்களை கொல்வது எளிது. ஆனால் உங்களால் கருத்துகளை கொல்ல முடியாது” என அவர் சொல்லியுள்ளார். அதனை அன்றைய பிரிட்டிஷ் இந்தியா மன்றத்தில் துண்டறிக்கையாக அவர் வீசி இருந்தார். அவர் சொன்னது போல இன்றும் அவரது சித்தாந்தத்தை பின்பற்றி வருபவர்கள் இருக்கின்றனர். நாட்டுக்காக மிக இளம் வயதில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் மாண்டு இருந்தாலும் அவர் விதைத்துச் சென்ற சுதந்திர வேட்கை இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தது. அவர் குறித்து நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மை தகவல்கள்...
செப்டம்பர் 28, 1907-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் லயால்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பங்காவில் பிறந்தவர்.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து அவரது குடும்பத்தினர் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைக்காக ஆங்கிலேயர்களுடன் யுத்தம் செய்ய துப்பாக்கி தேவை என்பது குறித்து அவரது பால்ய காலத்தில் பேசுவாராம்.
தன்னுடைய 12 வயதில் ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
14 வயதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குருத்வாரா நங்கனா சாஹிப்பில் ஆயுதம் இல்லாத மக்களை கொன்ற காரணத்திற்காக அந்தப் போராட்டம் நடந்துள்ளது.
அவர் சிறந்த நடிகர் என சொல்லப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க நாடகத்தை ஒரு களமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் அவர்.
காந்தியின் தத்துவமான அகிம்சையை அவர் விரும்பாதவர்.
1922 வாக்கில் இளம் புரட்சியாளர் இயக்கத்தில் அவர் இணைந்துள்ளார். ஆயுதம்தான் பிரிட்டிஷ் ஆட்சியை நாட்டை விட்டு துரத்தி அடிக்கும் என நம்பியுள்ளார்.
நாட்டில் வெடித்த மதக் கலவரத்தின் காரணமாக மத நம்பிக்கையை மறுக்க தொடங்கினார். “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என ஒரு கட்டுரை எழுதி இருந்தார். பின்னாளில் அது புத்தகமாக வெளியானது.
அவர் சிறந்த எழுத்தாளரும் கூட. பஞ்சாபி மற்றும் உருது மொழி பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி உள்ளார்.
சிறையில் இருந்தபோதும் அவரது போராட்டம் தொடர்ந்துள்ளது. அங்கும் தனது குரலை அவர் ஒலிக்க செய்துள்ளார்.
மார்ச் 23, 1931-ல் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரது பிறப்பு மற்றும் இறப்பு என இரண்டுமே அரங்கேறிய இடம் ஒருங்கிணைந்த இந்தியாவில் நடைபெற்றது. இப்போது அது பாகிஸ்தானில் உள்ளது.
அவரது பிறந்த நாளான இன்று அவரது பொன்மொழியான இதனை மீண்டும் ஒருமுறை நினைவு கூறுவோம் “தனிநபர்களை கொல்வது எளிது. ஆனால் உங்களால் கருத்துகளை கொல்ல முடியாது.”
WRITE A COMMENT