Last Updated : 27 Sep, 2022 05:03 PM

1  

Published : 27 Sep 2022 05:03 PM
Last Updated : 27 Sep 2022 05:03 PM

“எல்லாவற்றையும் விட எனக்கென தனி அடையாளம் உள்ளது” - ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்‌ஷயா நேர்காணல்

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற ரக்‌ஷயா

”நான் வென்றதை பத்திரிகைகள் ‘கூலித் தொழிலாளியின் மகள் வென்றார்’ என்று குறிப்பிட்டிருந்தன. நான் பல தடைகளை கடந்து வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனால் அவர்கள் வைத்த தலைப்பு என்னை பாதித்தது. கூலித் தொழில் ஒன்றும் கீழான தொழில் அல்ல. எல்லாவற்றைவிட எனக்கான தனி அடையாளம் என்று உள்ளது..”

தமிழகத்தைச் சேர்ந்த ரக்‌ஷயா என்ற இளம்பெண், அழகிப் போட்டியில் ‘மிஸ் தமிழ்நாடு’ மகுடத்தை வென்றிருக்கிறார். அவருடனான நேர்காணல்...

உங்களை பற்றிய அறிமுகம்: “என் பெயர் ரக்‌ஷயா. நான் சத்தியபாமா பல்கலைகழகத்தில் காட்சி - ஊடகவியல் முடித்திருக்கிறேன். சொந்த ஊர் திருக்கழுக்குன்றம். தற்போது வேளச்சேரியில் வசித்து வருகிறோம். என்னுடைய அப்பா கட்டிடத் தொழிலாளி. அம்மா எக்ஸ்போர்ட்டில் பணி செய்து வருகிறார். இந்த மாதம் இந்திய அளவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அழகுப் போட்டியில் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றிருக்கிறேன்.”

இந்தத் துறையில் எப்படி ஆர்வம் வந்தது, என்னனென்ன முயற்சிகள் செய்தீர்கள்? - “எதாவது சாதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 17 வயதாகும்போது எதில் எனக்கு ஆர்வம் என தேடினேன். அதில் கண்டதுதான் இந்தத் துறை. முதலில் காலடி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது முயற்சி அதற்கான பலனை அளித்தது. தற்போது ‘மிஸ் தமிழ்நாடு’ வென்றுள்ளேன். எனது முயற்சிக்கு எனது நண்பன் ஜனார்த்தனம் வழங்கிய உறுதுணை எனக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தது. அம்மா, அப்பா முதலில் இந்தத் துறையை நான் தேர்வு செய்ததை ஏற்றுகொள்ளவில்லை. நான் இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன். அதன்பிறகு பெற்றோரும் உறுதுணையாக நின்றனர்.”

அழகு என்பது உங்கள் பார்வையில்... - “நம்பிக்கைதான் அழகு... நீங்கள் உயரமாக இருங்கள், குள்ளமாக இருங்கள், எந்த நிறமாகவும் இருங்கள். ஆனால் நம்பிக்கையுடன் இருங்கள். அதுதான் நமக்கு அழகு சேர்க்கும்.”

இந்தப் பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள்... “சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய பரிந்துரைத்தார்கள். எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. அதெற்கெல்லாம் பணமும் என்னிடம் கிடையாது. நான் வென்றதை பத்திரிகைகள் ‘கூலித் தொழிலாளியின் மகள் வென்றார்’ என்று குறிப்பிட்டிருந்தன. நான் பல தடைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனால், அவர்கள் வைத்த தலைப்பு என்னை பாதித்தது. கூலித் தொழில் ஒன்று கீழான தொழில் அல்ல. எல்லாவற்றைவிட எனக்கான தனி அடையாளம் என்று உள்ளது.

‘மிஸ் தமிழ்நாடு’ இறுதிச் சுற்றில் எனக்கு ஏன் இந்த மகுடம் அளிக்கப்பட வேண்டும் என்று கேள்வி கேட்டார்கள். நான் இன்னாருவருடைய மனைவியாகவும், மகளாகவும் அறியப்பட விரும்பவில்லை. எனக்கான தனி அடையாளம் வேண்டும் என்றேன். இதையேதான் நான் பத்திரிகைகளுக்கும் கூறினேன்.”

உங்களுடைய ரோல் மாடல்?

“எனக்கு யாரும் ரோல் மாடல் இல்லை. எனக்கு நான்தான் ரோல் மாடல். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த மாடலான வின்னி ஹார்லோ பிடிக்கும்.”

அடுத்த இலக்கு... - “அடுத்தது என்ன என்பதெல்லாம் நான் கவனம் கொள்வதில்லை. தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோனோ அதையே சிறப்பாக செய்ய வேண்டும். நிகழ்காலத்தை சரியாக கையாண்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.”

அழகுப் போட்டியில் ஆர்வம் உள்ள இளம்பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை: “எல்லோரும் இம்மாதிரியான போட்டிகளில் தயக்கம் இல்லாமல் பங்கேற்க வேண்டும். கனவு உள்ளது என்று வீட்டிலே உட்கார்ந்திருந்தால் நமக்கு வெற்றி கிடைக்காது. ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க...”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x