Published : 22 Sep 2022 06:57 AM
Last Updated : 22 Sep 2022 06:57 AM

சிந்து சமவெளி நாகரிகத்துடன் நம்மை இணைக்கும் பாலம் சங்க இலக்கியங்கள் - வரலாற்று ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கருத்து

ஆர்.பாலகிருஷ்ணன்

சென்னை: இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல், ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளின்படி, சிந்து சமவெளி நாகரிகத்தை முதன்முதலில் கண்டறிந்தார்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1924 செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வின் 98-வது ஆண்டை நினைவூட்டும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் ‘தெற்காசியாவின் தாய்நிலம்’ என்ற தலைப்பில் ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் பேசியதாவது;

இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிரியவில்லை என்பதை அறிய 1924-ம் ஆண்டு வரை இந்த உலகம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஜான் மார்ஷல் சிந்துசமவெளி நாகரிகத்தை அறிவித்த பின்னர்தான் அனைத்து சூழல்களும் மாறின. ஆரியர்களுக்கு முன்பும் மிகச் சிறந்த நாகரிக வளர்ச்சியை சிந்து சமவெளி மக்கள் அடைந்திருந்தனர்.

அத்தகைய சிந்து சமவெளி நாகரித்துடன் நம்மை இணைக்கும் பாலமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் இடையே உள்ள இடைவெளியை அறிய வழிசெய்ததும் சங்க இலக்கியங்கள்தான்.

தெற்காசியாவின் கடந்த காலத்தை மீண்டும் உருவாக்க சங்க இலக்கியத்தின் கூறுகள் அவசியம். அதில் பாலைவனம் உட்பட புவியியல் சார்ந்த அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மொழிவாரியாக திராவிடர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை வரலாற்று ரீதியாக எடுத்துக்கூறி வருகிறோம்.

இந்த நிலத்தில், உறவுக்குள் திருமணம் செய்யும் முறை இருந்ததற்கான சாத்தியம் உள்ளது. தற்போது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையேயான வேறுபாடு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் பலர் பேசிவருகின்றனர். ஆனால், ஒருங்கிணைந்த தமிழினத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, திராவிடர் உள்ளிட்ட பிரிவுகள் அவசியமானவை.

சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அம்பா என்னும் சொல்கூட ஆரிய மொழி கிடையாது. அது திராவிட மொழிதான். கிழக்கு ஈரானிய மொழி, நேபாளி, அசாமி உட்பட 11 மொழிகளில் சிந்து சமவெளியில் பேசப்பட்ட ‘ஆய், இ’ எனும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கு அம்மா என்ற பொருளும் உணர்த்தப்பட்டுள்ளது.

இந்திய-ஐரோப்பா மொழிகளில் இருந்து ஸ்பானிஷ், உக்ரேனியன், ஆங்கிலம் என பல்வேறு கிளை மொழிகள் உருவாகியுள்ளன. ஏனெனில், இங்குள்ள மா-டர் என்ற சொல் ஆங்கிலத்தில் மதர், சம்ஸ்கிருதத்தில் மாத்ரு என பொருள்படுகிறது. இதன்மூலம், சிந்துசமவெளி நாகரிகம் பரந்து காணப்பட்டதை நாம் அறியமுடிகிறது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x