Published : 16 Sep 2022 04:10 AM
Last Updated : 16 Sep 2022 04:10 AM
உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்கவும், சக ஊழியர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும் வகையிலும் தேயிலை பறிக்கும்போது பல மொழிகளில் பாடல்களை பாடி அசத்துகிறார் கோத்தகிரியை சேர்ந்த ரெஜினா லூக்காஸ்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரெஜினா லூக்காஸ் (48). இவர், தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் மொழி மட்டுமின்றி, மலையாளம், இந்தி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களின் படுக மொழி பாடல்களை பாடி வருகிறார். இசை பயிற்சி இல்லாமல், சிறு வயது முதலே தங்கள் குடும்ப விழாக்கள், ஆலய வழிபாட்டின்போது பாடுகிறார்.
தற்போது தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியின்போது, உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் பாடல்கள் பாடி மகிழ்விக்கிறார்.
இந்நிலையில், பணியின்போது நடிகர் சிவாஜி நடித்த புதிய பறவை படத்தில் இடம்பெற்றிருந்த பி.சுசீலா பாடிய 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலை பாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், ரெஜினாவின் பாடல்களை தங்கள் செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ரெஜினா லூக்காஸ்கூறும்போது, "கேள்வி ஞானத்தின் மூலமாக பாடல்களை கற்றுக்கொண்டு, வீட்டு விசேஷங்கள் மற்றும் ஆலய வழிபாடுகளில் பாடி வருகிறேன். ஒரு சில மேடை கச்சேரிகளில் பாடியுள்ளேன்.
ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் பாடல், இந்தஅளவுக்கு புகழ்பெறும் என நினைக்கவில்லை. பலமுறை வாய்ப்புகள் தேடியும் கிடைக்கவில்லை.
சமூக வலை தளங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோ பிரபலமாகியுள்ளது. இதுவரை பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கும் நேரங்களில் குடும்பத்தினர், சக தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவும் பாடல்களை பாடி மனதை ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்" என்றார்.
ரெஜினாவின் கணவர் லூக்காஸ் கூறும்போது, "தன்னைவிட தன் மனைவி மிக நன்றாக பாடுவார் என்றும், அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment