Published : 16 Sep 2022 04:25 AM
Last Updated : 16 Sep 2022 04:25 AM

தூத்துக்குடியில் அழிந்த முத்துவளத்தை மீட்டெடுக்க முயற்சி: 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

தூத்துக்குடி சுனாமி நகர் கடல் பகுதியில் முத்துச்சிப்பி குஞ்சுகளை கடலில் விடும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி கடல் பகுதியில் 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகளை கடலில் விடும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி கடல் பகுதியில் முத்து வளம் அழிந்து போனதால் கடந்த 1961-ம் ஆண்டுடன் அங்கு முத்துக்குளித்தல் தொழில் நிறுத்தப்பட்டது. முத்துச்சிப்பிகள் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் இழந்த முத்து வளத்தை புதுப்பிக்கும் முயற்சியாக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் தனது பொரிப்பகத்தில் முத்துச்சிப்பி குஞ்சுகளை வளர்த்து, அவற்றை கடலில் விடும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

அவைகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி சுனாமிநகர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி பி.எஸ்.ஆஷா தலைமை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் முத்துச்சிப்பி குஞ்சுகளை கடலில் இருப்பு வைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மூன்று படகுகளில் ஆட்சியர், விஞ்ஞானிகள், அதிகாரிகள் நடுக்கடலுக்கு சென்று முத்துச்சிப்பி குஞ்சுகளை கடலில் விட்டனர்.

இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முத்துக்குளித்தல் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அவர்களது பொரிப்பகத்தில் வளர்க்கப்பட்ட 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகள் தூத்துக்குடி சுனாமி நகர் மற்றும் கீழ வைப்பாறு ஆகிய இரண்டு பகுதிகளில் கடலில் விடப்படும். இதற்காக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் நமது கடல் பகுதியில் இருந்து தாய் முத்துச்சிப்பிகளை சேகரித்து தங்கள் பொரிப்பகத்தில் இனப்பெருக்கம் செய்ய வைத்து குஞ்சுகளை வளர்த்துள்ளனர்.

முத்துச்சிப்பி வளர்ப்பு மூலம் மீனவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு எந்த வகையில் பயனளிக்க முடியும் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையமும் கலந்தாலோசித்து திட்டங்கள் வகுக்கப்படும்.

அடுத்த ஆண்டு முத்து அறுவடை செய்து, அதனை விற்பனை செய்வதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றார் .

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஆஷா கூறியதாவது: முத்துச்சிப்பி குஞ்சுகள் இயற்கையாக கடலில் திறந்த வெளியில் விடப்படுகின்றன.

மேலும், 6 மிதவை கூண்டுகளிலும் முத்துச்சிப்பி குஞ்சுகளை இப்பகுதிகளில் வளர்க்கிறோம். அதற்கான கூண்டுகளும் தற்போது மிதக்க விடப்படுகின்றன. முத்துச்சிப்பி குஞ்சுகளின் வளர்ச்சி உள்ளிட்டவைகளை தொடர்ந்து கண்காணித்து ஆராய்ச்சி செய்வதற்காக மிதவை குண்டுகளில் வளர்க்கப்படுகின்றன என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் செல்வக்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் விஜயராகவன், வயலோ, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி செ.காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x