Published : 11 Sep 2022 04:00 AM
Last Updated : 11 Sep 2022 04:00 AM

2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் களைகட்டிய நாய்கள் கண்காட்சி

சென்னை

கரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த நாய்கள் கண்காட்சி, 2 ஆண்டுகளுக்குப் பிறகுசென்னையில் நேற்று நடைபெற்றது.

‘தி மெட்ராஸ் கெனைன் கிளப்’சார்பில், சென்னை, அடையாறில் உள்ள குமார ராணி முத்தையா கலை, அறிவியல் கல்லூரி திடலில் நடந்த இக்கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர் மேன், பக், டெரியர், சைபீரியன் ஷஸ்கி, லேப்ராடர் ரெட்ரிவேர் போன்ற 68 இனங்களைச் சேர்ந்த 570 நாய்கள் பங்கேற்றன.

அழகுப் போட்டியில் பங்கேற்க அழைத்து வருவதுபோல், நாய்களை அலங்காரம் செய்து உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக கீழ்ப்படிதல் போட்டியில், உரிமையாளர்களின் சொல்லுக்கு கட்டுப்படும் நாய்களைக் கண்டறிந்து பரிசுகள் வழங்கப்பட்டன.

அனைத்து வகைப் போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டு, அடுத்த சுற்றுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டன.

கிரேடன் மற்றும் ராட்வீலர்களுக்கென தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் சரியான முறையில் வளர்க்கப்பட்ட நாய்களைத் தேர்ந்தெடுத்து, ஆண், பெண், குட்டிகள் என பல்வேறு பிரிவுகளில் சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டிகளை மட்டும் மெட்ராஸ் கெனைன் கிளப்புடன் இணைந்து கிரேடன் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் ராட்வீலர் அசோசியேஷன் ஆகியன ஏற்பாடு செய்திருந்தது.

செர்பிய நாட்டைச் சேர்ந்த நேனாட் டேவிடோவிக், நடாஸா டேவிடோவிக், தாய்லாந்தைச் சேர்ந்த பிரட் வாங், இந்தியாவைச் சேர்ந்த யசோதரா, கெளரி நர்கோல்கர், ஜெ.ரங்கராஜன் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து சிறந்த நாய்களைத் தேர்ந்தெடுத்தனர்.

வெளிநாட்டு வகை நாய்களுக்கு இணையாக தமிழகத்தைச் சேர்ந்த ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி உள்ளிட்ட நாட்டு நாய்களும் போட்டிகளில் பங்கேற்றன.

போட்டிகளில் பங்கேற்ற நாய்களின் சேட்டை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இன்றும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியில், நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, பரிசுகளை வழங்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‘மெட்ராஸ் கெனைன் கிளப்’ தலைவர் சி.வி.சுதர்சன், செயலாளர் எஸ்.சித்தார்த் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x