Published : 06 Sep 2022 04:20 AM
Last Updated : 06 Sep 2022 04:20 AM
தருமபுரி மாவட்டத்தில் தமிழ் ஆர்வம் மிக்க ஊராட்சி உறுப்பினர் ஒருவர், தெருக்களுக்கு சூட்டியுள்ள பெயர்கள் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ஒன்றியத்தில் உள்ளது ராமகொண்டஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியின் 5-வது வார்டு பகுதியில் சுமார் 350 வீடுகள் உள்ளன. அவற்றில் 200 வீடுகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இதர 150 வீடுகள், விவசாய நிலங்களில் ஆங்காங்கே தனித்தனியாக அமைந்துள்ளன.
இதில், 200 வீடுகள் அமைந்துள்ள பகுதியிலும் தெருக்களுக்கு பெயர் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த வார்டு உறுப்பினரான முத்துலிங்கம், தெருக்களுக்கு பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு செந்தமிழ், பைந்தமிழ், இன்பத்தமிழ், முத்தமிழ், இளந்தமிழ், தேன்தமிழ், பசுந்தமிழ், பூந்தமிழ் என 8 தெருக்களுக்கும் பெயர் சூட்டிய வார்டு உறுப்பினர், தனது சொந்த செலவில் இதற்கான பெயர் பலகைகளையும் அமைத்துள்ளார்.
இயல்பாகவே தமிழ் மொழி மற்றும் இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்ட வார்டு உறுப்பினர் முத்துலிங்கம், எம்.காம்., பி.எட்., பட்டதாரி.
இது குறித்து, முத்துலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறிய தாவது;
5-வது வார்டு பகுதியில் தெருக்களுக்கு பெயர் இல்லாத நிலையில் அந்த தெருவில் வசிக்கும் யாரோ ஒருவர் பெயரைக் குறிப்பிட்டோ அல்லது வாட்டர் டேங்க் தெரு என்றோ, ரேஷன் கடை தெரு என்றோ அடையாளப் படுத்தும் நிலை இருந்தது.
இதற்கு தீர்வு ஏற்படுத்தி தெருக்களுக்கு நிரந்தர பெயரை உருவாக்க முடிவு செய்தேன். அப்போது, எனக்கு மிகவும் பிடித்த தமிழையும் இணைத்து தெருக்களுக்கு பெயரை உருவாக்கி சூட்டுவது என திட்டமிட்டேன்.
இதுகுறித்து, வார்டு பகுதிக்கு உட்பட்ட சிலரிடமும் விவாதித்தேன். அதன் விளைவாக 8 தெருக்களுக்கும் ‘தமிழ்’ என்ற வார்த்தையை உள்ளடக்கி பெயரை சூட்டினோம். இதில் 4 தெருக்கள் ராமகொண்டஅள்ளி-ஏரியூர் பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளது. எனவே, இவ்வழியே செல்வோர் பெயர்ப் பலகையை பார்த்துவிட்டு நேரில் வந்தோ செல்போன் மூலமோ பாராட்டு தெரிவித்துச் செல்கின்றனர்.
இதை கேட்கும்போது மனம் நிறைவாக உணர்கிறேன். இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment