Published : 05 Sep 2022 04:30 AM
Last Updated : 05 Sep 2022 04:30 AM
விவசாயம் நவீன தொழில்நுட்பத்துக்கு மாறி வரும் நிலையில் பழநி விவசாயிகள் ஏர் கலப்பையுடன் மாடுகளை வாடகைக்கு அமர்த்தி உழவுப் பணி செய்கின்றனர்.
பழநி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வேளாண், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விவசாயமே இங்குள்ள மக்களின் பிரதானத் தொழில் ஆகும். அதற்கு உழவுப் பணி முக்கியம்.
முன்பு ஏரில் மாடுகளைப் பூட்டி உழவு செய்தனர். இதற்காக, விவசாயிகள் வீடுகளில் உழவு மாடுகளை வளர்த்தனர். நாளடைவில் அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக உழவுப் பணியை விரைவில் மேற்கொள்ள டிராக்டர் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் உழவு மாடுகளின் தேவை குறைந்தது.
விவசாயிகளும் பராமரிக்க முடியாமல் உழவு மாடுகளை விற்பனை செய்தனர். இந்நிலையில், பழநியில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழநி அருகே கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி விவசாயிகள் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்பவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் உழவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் இயந்திரங்கள் அனைத்தும் வாடகைக்குக் கிடைப்பதுபோல் பழநி அருகிலுள்ள கிராமங்களில் ஏர் கலப்பை யுடன் மாடுகள் கிடைக்கின்றன. ஒரு ஜோடி உழவு மாடு ஒரு நாள் வாடகையாக ரூ.3 ஆயிரத்துக்குக் கிடைக்கிறது. இதை வாடகைக்கு அமர்த்தி பழநி விவசாயிகள் உழவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோம்பைப்பட்டி விவசாயி செல்லத்துரை கூறுகையில், டிராக்டர் மூலம் உழவுப்பணி மேற்கொள்ள ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது. பாரம்பரிய முறையில் மாடுகளைப் பூட்டி உழவுசெய்ய ஒருநாள் முழுவதும் ரூ.3 ஆயிரம் மட்டுமே. பாரம்பரிய முறையால் மண் வளம் பெறும். பயிர்களும் செழித்து வளரும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT