Published : 27 Aug 2022 11:47 PM
Last Updated : 27 Aug 2022 11:47 PM
பெகுசராய்: பிஹார் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பெண் பப்லி குமாரி. 7 மாத குழந்தைக்கு தாயான இவர், பிஹார் மாநில தேர்வாணையம் பிபிஎம்சி நடத்திய தேர்வில் வென்று தற்போது டிஎஸ்பி ஆக உள்ளார்.
பாப்லி குமாரி, கடந்த 2015-ம் ஆண்டு பிஹார் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிக்குச் சேர்ந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வந்த அவருக்கு பெரிய பதவியில் அமர வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. அந்தக் கனவை நனவாக்க முயற்சித்த குமாரி பிஹார் மாநில பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளுக்காக காவல்துறையில் வேலை பார்த்துக்கொண்டே படித்து வந்திருக்கிறார். முதல் இரண்டு முறை எழுதிய தேர்வில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. என்றாலும், மூன்றாவது முயற்சியில் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார்.
7 வருட கனவு எப்படி நிறைவேறியது என்பதை விளக்கியுள்ள பாப்லி குமாரி, “எனது குடும்பத்தில் மூத்த மகள் நான். அதனால், சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்கும் நிலை எனக்கு உண்டானது. அரசு வேலை எனது பொறுப்புக்கான விடை என்பதறிந்து முயற்சித்தேன். 2015-ம் ஆண்டு பீகார் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதைவிட, பெரிய அரசு பதவியில் சேர முயற்சி செய்து கொண்டே இருந்தேன். தொடர்ந்து பிபிஎஸ்சி தேர்வு எழுதினாலும் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றேன். திருமணத்திற்குப் பின்பு, என் கணவர் இந்த இலக்கை நோக்கிய என் பயணத்தை ஊக்கப்படுத்தினார். அவரின் பங்களிப்புடன் இப்போது வெற்றிபெற முடிந்தது” என்றார்.
பாப்லி குமாரி கான்ஸ்டபிளாக பணியாற்றிய பெகுசராய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் அவரை நேரில் அழைத்து பாராட்டி, “குமாரி கான்ஸ்டபிளாக பணியாற்றி கொண்டே பிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது எங்களுக்கு பெருமையான தருணம். அவர் விரைவில் டிஎஸ்பி பயிற்சிக்கு செல்ல இருக்கிறார். குமாரியின் சாதனை, திருமணமான பெண்களை தங்கள் வீட்டுப் பொறுப்புகளைத் தாண்டி உயரங்களை எட்ட வேண்டும் என்ற கனவைத் தொடரவும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT