Published : 26 Aug 2022 05:28 PM
Last Updated : 26 Aug 2022 05:28 PM
புதுச்சேரி: 20 கிலோ காகிதங்களைக் கொண்டு 4.5 அடியில் ரசாயனமின்றி ஒரு வாரத்தில் புதுச்சேரி அரசு பள்ளிக் குழந்தைகள் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளனர்.
புதுச்சேரி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கைவினைப் பொருட்கள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார். இதன் பயனாக பள்ளியில் உள்ள காகிதங்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். பயனற்ற காகிதங்களை குப்பையில் போடாமல் 4.5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவும் இன்றி சிலையை உருவாக்கியுள்ளனர்.
இதுபற்றி ஆசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், "பயனற்ற பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்க முடியும் என்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அந்த வகையில் ஒரு வார காலத்தில் 20 கிலோ காகிதங்களைக் கொண்டு 10 மாணவர்கள் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளோம்.
நீர்நிலைகளை காக்க வேண்டும் என்ற கருத்தை குழந்தைகள் அறியவே இம்முயற்சி. ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியையும் குழந்தைகள் பெற்றுள்ளனர். தொடர்ந்து கலைநயமிக்க காகித சிற்பங்களை இக்குழந்தைகள் உருவாக்குவதும் சிறப்பு" என்று குறிப்பிட்டார்.
பள்ளிக் குழந்தைகள் கூறுகையில், "பயனற்ற பொருள் என ஏதுமில்லை. இதேபோல் இயற்கை விநாயகரை வீட்டிலும் உருவாக்க உள்ளோம். எப்பொருளையும் கலைப்படைப்பாக மாற்றுவது நம்கையில்தான் உள்ளது" என்றனர் நம்பிக்கையுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT