Last Updated : 10 Aug, 2022 04:13 PM

1  

Published : 10 Aug 2022 04:13 PM
Last Updated : 10 Aug 2022 04:13 PM

“அப்படியா... தண்டோராவுக்கு தடை போட்டாச்சா? எங்களுக்குத் தெரியாதே!” - கிராமத்து நிலவரம் பகிர்ந்த பணியாளர்கள்

“எனது அன்றாட பணியில் தண்டோரா போடுவதும் ஒன்று. அதற்கு கூடுதல் சம்பளம் கிடையாது”, "நாங்கள் செய்யும் தூய்மைப் பணிகளுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுப்பதில்லை. அதனை அரசாங்கம் தந்தால் நல்லது", “50 வருடங்களாக நான் தண்டோரா அடித்து வருகிறேன். இதான் என் முதன்மைத் தொழில்” - கிராமங்களில் தண்டோரா அடித்து வருபவர்கள் பகிரந்தவை.

"தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்” என தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியாளர்களை கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தார்.

தண்டோரா அடிப்பது சமூக நீதிக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது, சாதிய ஆதிக்க மனநிலை, தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்த காலத்தில் தண்டோரா போன்ற பிற்போக்குதனங்கள் எதற்கு என பல ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பின் உத்தரவு தாமதமாக வந்தாலும் நிச்சயம் வரவேற்கக் கூடியது. ஆனால், அரசின் அறிவிப்பு வந்தும் கூட, சில மாவட்ட ஆட்சியாளர்கள் காவிரிப் பகுதிகளில் வெள்ள அபாயம் தொடர்பான எச்சரிக்கையை மக்களுக்கு தெரிவிப்பதற்கு தண்டோராவை பரிந்துரைந்திருந்தனர் என்பதே கள நிலவரம்.

இனி தண்டோராவுக்கு தடை என அரசு அறிவுறுத்தியுள்ள சூழலில், தாண்டோரா போடும் சிலரை தொடர்புக் கொண்டு பேசினேன். ‘இந்தியாவின் தொலைத்தொடர்ப்பு வளர்ச்சி, குக்கிராமங்களுக்கு சென்றடைந்து விட்டது, 5ஜியை நோக்கி வந்துவிட்டோம்’ என பெருமை அடித்துக் கொள்ளும் நமக்கு, இவர்கள் மூலம் ஒரு கூடுதல் செய்தியும் காத்திருந்தது. அரசின் தண்டோரா தடை தொடர்பாக நான் பேசிய இருவரிடமும் கைபேசி இல்லை. அவர்கள் கிராமங்களில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், தெரிந்தவர்களின் உதவியுடனே அவர்களுடன் பேச முடிந்தது.

மிகவும் அடிமட்ட வாழ்க்கை நிலையிலேயே இவர்கள் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தங்களது வறுமைக் காரணமாக பஞ்சாயத்துகள் மூலம் சொல்லப்படும் கீழ்நிலைப் பணிகளை செய்வதற்கு ஆண்டாண்டு காலமாக இம்மக்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். வறுமை ஒருபுறமும், சாதியப் பாகுப்பாடு மறுபுறமும் மாறி மாறி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தண்டோராவுக்கு தடை அரசு தடை விதித்துள்ளது என்ற செய்தி என் மூலம் கூறப்பட்டபோது, “அப்படியாமா... எங்களுக்கு இன்னும் கூப்பிட்டு சொல்லலையே” என நிதானமாக கூறினர்.

தண்டோராவுக்கு பின்னால் இருக்கும் சாதி ரீதியிலான அரசியல் இம்மக்களுக்கு தெரியவில்லை. எனெனில், நமது சமூகம் இந்த சாதி வேறுப்பாட்டை இயல்பான ஒன்றாக அவர்களை ஏற்கச் செய்திருக்கிறது என்பதே உண்மை.

மதுரைரையின் கம்பூர் பஞ்சாயத்தை சேர்ந்த முத்து (ஆண்டி) பேசும்போது, “என் பெயர் முத்து, நான் கம்பூர் பஞ்சாயித்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிகிறேன். நான் தண்டோரா 5 வருடங்களாக போட்டுக் கொண்டிருக்கிறேன். எனது மனைவியும் தூய்மைப் பணியாளர்தான். எங்களுக்கு பஞ்சாயத்தில் இருந்துதான் தாண்டோரா போட கூறுவார்கள். இந்தச் செய்தியை போய் ஊர் மக்களுக்கு சொல்லுங்கள் என்று கூறுவார்கள் அவர்கள் கூறியதை மக்களிடம் அப்படியே கூறுவேன். இனி தண்டோரா போடக் கூடாது என்ற தகவல் இதுவரை எனக்கு தெரியவில்லை.

முத்து

உண்மையில் இந்த தண்டோராவுக்கு பின்னால் இருக்கும் அரசியல் எல்லாம் எனக்கு தெரியாது. இது பிற்போக்குத்தனம் என்றால், இதைத் தடுப்பதில் தவறில்லையம்மா. தண்டோரா போடுவதற்கு எங்களுக்கு கூடுதல் சம்பளம் எல்லாம் கிடையாது. எனது அன்றாட பணியில் அதுவும் ஒன்று. எங்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. தண்டோரா மட்டுமல்ல, சாக்கடைகள் அள்ளுவதற்கும், குப்பை அள்ளுவதற்கும் எங்களைத்தான் கூறுவார்கள். இதுதான் எங்கள் வேலை. இதற்காகத்தான் எங்களை வேலைக்கு எடுத்துள்ளார்கள் என்று பஞ்சாயித்தில் கூறுவார்கள்.

அதிகாரிகள் என்ன சொல்றாங்காங்களோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இவற்றைத் தவிர்த்து மற்ற வேலைகளையும் செய்வோம். நல்ல சம்பளம் கொடுத்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். நாங்கள் செய்யும் தூய்மைப் பணிகளுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுப்பதில்லை. அதனை அரசாங்கம் தந்தால் நல்லது” என்றார்.

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வராஜ் பேசும்போது, “இங்கு இரண்டு வகையிலானவர்கள் உள்ளார்கள். ஒன்று பஞ்சாயத்து மூலம் தண்டோரா போடுபவர்கள். இவர்கள் அரசாங்கம் கூறும் அறிவிப்புகளை மக்களுக்கு தெரிவிப்பார்கள். உதாரணத்துக்கு வெள்ள அபாயம், கரோனா தடுப்பூசி போன்ற அறிவிப்புகள்..

இன்னொரு வகையினர் பரம்பரையாக தண்டோரா தொழில் செய்பவர்கள். இவர்கள் ஊர் தலைவர்கள், நாட்டாமை உத்தரவில் தண்டோரா போடுபவர்கள். உதாரணத்துக்கு ஊரில் பொருள் எதாவது காணாமல் போய்விட்டால், ஊர்த் திருவிழா நடக்கிறது என்றால் இவர்கள்தான் தண்டோரா போடுவார்கள். இவ்வாறுதான் கிராமங்களில் தண்டோரா போடப்படுகிறது.

உண்மையில் அரசின் உத்தரவு இந்த இரண்டு வகையினருக்காகவே போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இங்குள்ளவர்களுக்கு இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது கூட தெரியவில்லை. முன்பெல்லாம் குறிப்பிட்ட சாதியினர்தான் தண்டோரா போட வேண்டும் என்று இருந்தது. இது நாளடைவில் குறைந்தது. ஆனால் தண்டோராவில் சாதி இருக்கிறது இன்னமும் இருக்கிறது. அது அகலவில்லை. இந்த நிலையில் அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தண்டோரா தற்போது குறைந்திருக்கிறது என்றாலும், குக்கிராமங்களில் தண்டோரா முழுமையாக நீங்குவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

செல்வராஜ்

இங்குள்ள பஞ்சாயத்துகள் தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை. பாதுகாப்பற்ற சூழலில்தான் இவர்கள் சாக்கடை அள்ளுதல், குப்பைகளை கிடங்குகளில் கொட்டுவது போன்ற பணிகளை செய்கிறார்கள். அரசு இதிலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

ஓசூரில் கெலமங்கலம் பேரூராட்சியில், பரம்பரையாக தண்டோரா அடித்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர் ராமப்பா. தளர்ந்த குரலில் அவர் பேசியது: “எங்கள் தாத்தா காலத்திலிருந்தே நாங்கள்தான் இப்பகுதியில் தண்டோரா அடித்து வருகிறோம். 50 வருடங்களாக நான் இங்கு தண்டோரா அடித்து வருகிறேன். எங்கள் ஊர் பஞ்சாயத்து சார்பாகத்தான் தண்டோரா அடித்து வருகிறேன். ஒரு தடவை தண்டோரா அடித்தால் 500 ரூபாய் தருவார்கள்.

ராமப்பா

அரசாங்கம் தண்டோரா அடிக்கத் தடை விதித்திருப்பது இதுவரை எனக்குத் தெரியவில்லை. தண்டோரா என் முதன்மைத் தொழில், அது இல்லாமல் கூலித் தொழிலும் செய்து வருகிறேன். தாண்டோரா அடிப்பது தவறா, சரியா என்றெல்லாம் எனக்கு தெரியாது. இதனை குடும்பமாகவே நாங்கள் செய்து வருகிறோம். எனது பிள்ளைகளுக்கு நான் தண்டோரா அடிப்பது பிடிக்காது. அவர்களுக்கும் இந்தத் தொழில் வேண்டாம் என்றுதான் நான் நினைக்கிறேன். அரசாங்கள் எனக்கு ஏற்ற மாதிரி பஞ்சாயத்தில் நல்ல வேலை கொடுத்தால் மகிழ்ச்சி” என்று மாற்று வேலைகள் குறித்த எதிர்பார்ப்பை முன்வைத்தார்.

இந்திய வரலாற்றில் தண்டோரா முறை என்பது மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்துள்ளது. தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி இல்லாத காலத்தில் அரசாங்கத்தின் செய்திகளை கொண்டு செல்லும் தகவல் தூதுவர்களாக தண்டோரா போடுபவர்கள் அந்தக் காலக்கட்டங்களில் பார்க்கப்பட்டார்கள். ஆனால், நாளடைவில் இது சாதிக்கான அடையாளமாக மாறியது. சமூகத்தின் உறுத்தலாக கிராமப்புறங்களில் தொடர்ந்து வந்திருந்தது.

இந்த நிலையில், தண்டோராவுக்கான தடை, சாதிய அடையாளத்திற்கு எதிரான ஆரோக்கியமான மாற்றத்தை சமூகத்தை முன்னெடுக்கும் அதேவேளையில் இதுவரை தண்டோரா போட்டு வந்தவர்களின் வாழ்வாதாரத்துக்காக மாற்றுப் பணிகளுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதும் அவசியமாகிறது.

அத்துடன், கிராமப்புற பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், கடை நிலை பணியாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதில் தமிழகம் முழுவதும் தேக்க நிலை நிலவுகிறது. தூய்மைப் பணியாளர்கள் அதிகளகவில் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக பெண்கள். எனவே, அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதுடன், அவர்களின் பணி கண்ணியமும் காக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பொறுப்பு உள்ளது.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x