Published : 18 Jul 2022 07:43 PM
Last Updated : 18 Jul 2022 07:43 PM

ஹஜ் பயணம் சென்று திரும்பிய முஸ்லிம்களை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற காஷ்மீர் பண்டிட்டுகள்

காஷ்மீர் ஹஜ் பயணிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கும் இந்து பண்டிட்

ஸ்ரீநகர்: ஹஜ் புனித பயணம் சென்று காஷ்மீர் திரும்பிய முதல் பகுதி இஸ்லாமியர்களுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காஷ்மீரில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவரும் பராம்பரிய பழக்கங்களுள் ஒன்று, ஹஜ் புனித பயணம் சென்று திரும்பும் புனித பயணிகளுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு அளிப்பது. இணைந்து வாழ்வதையும் சகோதரத்துவத்தையும் காக்கும் வகையில் பின்பற்றப்படும் இந்த பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சனிக்கிழமை நடந்தது.

இந்தாண்டு ஹஜ் புனித பயணம் சென்று திரும்பிய முதல் பகுதி முஸ்லிம் பயணிகளை காஷ்மீர் பண்டிட்டுகள் இஸ்பாண்ட் டேன் (Izband Daen) (சுத்தம் மற்றும் மங்களகரமான சுற்றுச்சூழலைக் குறிக்கும் விதமாக செம்பு பாத்திரம் ஒன்றில் இஸ்ஃப்ண்ட் அல்லது ஹார்மலா விதைகளை எரித்தல்) காண்பித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

அப்போது பண்டிட்டுகள் “முபாரக்... முபாரக்...” என்று முஸ்லிம்களை பார்த்து கூறினர். அதற்கு முஸ்லிம்களும் மறுவாழ்த்து கூறி பதில் அளித்தனர். தொடர்ந்து புனித பயணம் முடித்து திரும்பி பயணிகளுடன் கை குலுக்கி தழுவிக் கொண்டனர். இந்த நிகழ்வு குறித்த படங்களும் வீடியோக்களும் முஸ்லிம்கள், பண்டிட்களால் அதிக அளவில் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளரான மோகிட் பான், "எங்கள் காஷ்மீர் பண்டிட் சகோதரர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஹஜ் பயணம் சென்று திரும்பிய ஹாஜிக்களிடம் புனித நபிகளின் ஆசிர்வாதம் வேண்டி பாரம்பரிய முறையில் 'நாட்' பாடி வரவேற்பளித்தனர். இது எங்களுடைய ஒருங்கிணைந்த கலாசாரம். இஸ்லாத்தை நம்புபவர்கள் அமர்நாத் யாத்திரைக்கு உதவுவார்கள். சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் அமைதியின் தூதுவர்கள்

இரண்டு பிரிவு மக்களும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான எண்ணங்களின் மூலம் காஷ்மீரியாட் என்னும் தனிதன்மையை மீட்டெடுத்துள்ளனர். பால்டாலி அமர்நாத் யாத்திரிகர்களுடன் ஈத் கொண்டாடிய முஸ்லிம்கள், நாட் பாடி ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்ற பண்டிட்கள் இவைகள் தான் ஒவ்வொரு சோதனைகளின் போதும் காஷ்மீர் எவ்வாறு மீண்டெழுந்துள்ளது என்பதற்கான சாட்சிகள்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இந்தாண்டு தொடங்கப்பட்ட அமர்நாத் யாத்திரையின் போது யாத்திரிகர்களை முஸ்லிம்கள் வரவேற்றதையும் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

கடந்த 1989ம் ஆண்டு பள்ளத்தாக்கில் நடந்த கலவரத்திற்கு பின்னர், ஹஜ் புனித பயணம் சென்று திரும்பிய தங்களின் முஸ்லிம் சகோரதர்களை இந்து பண்டிட்டுகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பது இதுவே முதல் முறை. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 80 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களில் 7 ஆயிரம் பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x