Published : 04 Jul 2022 04:01 PM
Last Updated : 04 Jul 2022 04:01 PM
பயண வசதியும், கையடக்கச் செலவும் கொண்டதால் இந்திய மக்களின் முதன்மையான பொதுப் போக்குவரத்துத் தேர்வு அன்றும், இன்றும், என்றும் ரயில்தான். அது பாசஞ்சர் ரயில், மோனோ ரயில், மெட்ரோ ரயில் என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கக் காரணம் மக்களின் ஆதரவுதான்.
இந்தியாவில் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும் ரயில்கள் பாய்ந்து கொண்டிருந்தாலும் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் பாதை தான் நாட்டின் மிக நீண்ட ரயில் பாதையாக அறியப்படுகிறது.
இந்தப் பாதை வழி நெடுகிலும் வெவ்வேறு பருவநிலை, வெவ்வேறு நிலப்பரப்பு, வெவ்வேறு மொழிப் பிராந்தியங்கள் என தேசத்தின் கலாச்சாரத்தை நம் கண் முன் கடை விரிக்கிறது. திப்ருகர் டூ கன்னியாகுமர் ரயிலுக்கு ‘தி விவேக் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தி விவேக் எக்ஸ்பிரஸ்: தி விவேக் எக்ஸ்பிரஸ் பற்றி அறிவோமா? - இதுதான் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாதை. ஒட்டுமொத்தமாக 4,273 கி.மீ பயண தூரம் கொண்டது. 80 மணி நேரம் 15 நிமிடங்கள் பயண நேரம். வடகிழக்கு மாநிலத்தில் வடக்கு எல்லையான அசாமின் திப்ருகர் நகரையும் தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியையும் இணைக்கிறது.
விவேக் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2011 முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இது பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
கரோனா உச்சம்தொட்டபோது நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அப்போது கடைசியாக விவேக் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
9 மாநிலங்கள்: இந்த ரயில் அசாம், நாகலாந்து, பிஹார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய 9 மாநிலங்களின் வழியாக பயணிக்கிறது. அந்தந்த மாநிலங்களில் தீன்சுகியா, டிமாபூர், குவாஹாட்டி, பொங்கைகான், அலிபுர்தார், சிலிகுரி, கிஷன்கஞ்ச், மால்டா, ராம்புர்ஹத், பாகூர், துர்காபூர், அசன்சால், காரக்பூர், பாலாசோர், கட்டாக், புவனேஸ்வர், கோர்தா, பிரம்மாபூர், ஸ்ரீகாகுளம், விஜியநகரம், விசாகப்பட்டினம், சாமல்கோட், ராஜமுந்திரி, எலூரு, விஜயவாடா, ஆங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, வேலூர், சேலம், ஈரோடு, கோயமுத்தூர், பாலக்காடு, திரிசூர், அலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
உலகின் மிக நீண்ட ரயில் பாதை: இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதையை அறிந்துகொண்ட நாம் உலகின் மிக நீண்ட ரயில்.பாதையை அறிவோமா? - அது ரஷ்யாவில் உள்ளது. இந்த ரயில் பயணம் 6 நாட்கள் நீடிக்கும். வெவ்வேறு டைம் ஜோன்களில் பயணிக்கும். இது மேற்கு ரஷ்யாவை நாட்டின் கிழக்கு முனையுடன் இணைக்கிறது. மாஸ்கோவில் தொடங்கும் பயணம் ஆறு நாட்களின் முடிவில் வ்ளாடிவோஸ்தக் நகரில் முடியும். பயண தூரம் 9,250 கிலோ மீட்டர். இந்தியா உலகின் மீண்ட ரயில் பாதை கொண்ட தேசமாக மாற இன்னும் 4977 கிலோ மீட்டர் தூரம் பயணப் பாதையை நீட்டிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT