Published : 13 Jun 2022 05:33 PM
Last Updated : 13 Jun 2022 05:33 PM

சிறுநீரக பாதிப்புகளின் அறிகுறிகள் முதல் காக்கும் வழிகள் வரை - மருத்துவர் தரும் அலர்ட் குறிப்புகள்

சிறுநீரக நோய் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் அவரால் உணரமுடியாது. குழந்தைகளுக்கு கிரியாட்டினின் அளவு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர்.வி.ராமசுப்ரமணியனிடம் சிறுநீரகங்கள் குறித்த அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பேசினோம்...

சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?

கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும்.

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

சிறுநீரகத்தின் பணிகள்

உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது. நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான். தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150, 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்திச் செய்கிறது.

டாக்டர்.வி.ராமசுப்ரமணியன் MD DM,
பேராசிரியர் மற்றும் சிறுநீரகவியல் துறைத் தலைவர்,
மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, திருநெல்வேலி.

அறிகுறிகள்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும். பசி குறையும். வாந்தி வரும். தூக்கம் குறையும். கடுமையான சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றுவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது.'டயாலிசிஸ்' என்கிற ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியதும் வரும்.

சிறுநீரகக் கல்

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் கால்சியம் பாஸ்பேட், ஆக்சலேட் என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும்.

சிறுநீரகம் காக்க சில வழிகள்...

உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

புகை பிடிக்காதீர்கள்.

தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை செக்அப் செய்துகொள்ள வேண்டும்.

நாம் பொதுவாக நம் வீடுகளில் அன்றாடம் சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கும்போது எந்தெந்தப் பொருட்கள் எவ்வளவு செலவாகி இருக்கிறது என்று ஒரு கணக்குப் பார்ப்போம். மற்ற பொருட்களில் இவ்வளவு செலவு ஆகியிருக்கிறது. இவ்வளவு மீதி இருக்கிறது என்பதை கரெக்டாக வைத்திருப்போம். ஆனால் உப்பில் மட்டும் இதுவரை இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்று ஒரு வீட்டிலும் அளவும் வைப்பது இல்லை. எனவே அதனை முறைப்படுத்த வேண்டும். உங்கள் வீட்டில் இனி உப்பு செலவு மற்றும் பயன்பாட்டுக்கும் கணக்கு எழுதுங்கள். அப்போதுதான் உப்பின் அளவை நாம் குறைத்து உணவில் பயன்படுத்துவோம்.

20 வருடங்களுக்கு முன்பு சிறுநீரகம் சார்ந்த நோய்கள் 3-வது இடத்தில்தான் இருந்தது. இன்று பார்த்தால் பெருகியிருக்கும் சிறுநீரக நோய்களுக்கு முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுவது டயாபட்டீஸ் தான். என்கிறார் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x