Published : 06 Jun 2022 09:36 PM
Last Updated : 06 Jun 2022 09:36 PM

புவிசார் குறியீடு பெறுவதில் பின்தங்கியிருக்கிறதா தமிழகம்? - ஓர் ஒப்பீட்டுப் பார்வை

ஒரு பிராந்தியத்தின் தனித்துவமிக்கப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். புவிசார் குறியீட்டைப் பெறுவதன் மூலம் அந்தப் பொருட்கள் இந்திய அளவில் கவனம் பெற முடியும். ஆனால், கள நிலவரம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டில் புவிசார் குறியீட்டைப் பெற்ற பொருட்கள் முறையாக சந்தைப்படுத்தப்படுகிறதா, அப்பொருட்கள் இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்படுகிறதா, புவிசார் குறியீட்டைப் பெறுவதில் பிற மாநிலங்களுடன் ஒப்பிட தமிழ்நாட்டின் இடம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம்: புவிசார் குறியீடு வழங்குவதன் முக்கிய நோக்கம், சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களை போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும் ஆகும்.

இந்திய அளவில் புவிசார் குறியீடு வழங்கும் தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. காஷ்மீரிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும், ஏன் பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும்கூட புவிசார் குறியீடு பெறுவதற்காக சென்னைக்கு வருகின்றனர். ஆனால் சென்னையில் புவிசார் குறியீடு வழங்கும் பணி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட, கடந்த மார்ச் வரை தமிழ்நாடு சார்ந்த 43 பொருட்களுக்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், வேளாண் பொருட்களில் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளது. கேரளா தன் உற்பத்தியான நவரா அரிசி, பாலக்காடு மட்டை அரிசி, பொக்காளி அரிசி, வேநாடு சீரக சம்பா அரிசி, சாலா அரிசி என பல அரிசி வகைகளுக்கு குறியீடு பெற்றுள்ளது. இது போல் உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, அசாம், மேற்கு வங்கம் ஆகியனவும் அரிசி வகைக்கான குறியீட்டினை பெற்றுள்ளன.

ஆனால் தமிழகம் இதுவரை அரிசி வகைகளுக்கு குறியீடு பெறவில்லை. மாம்பழ வகைகளில் மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, குஜராத், கா்நாடகா ஆகிய மாநிலங்களே பெற்றுள்ளன. தமிழகத்தின் சேலம் மாம் பழம் இப்போதுதான் பரிசீலனையில் இருந்து வருகிறது. கும்பகோணம் வெற்றிலை பிரபலமானது. ஆனால் இதற்கு குறியீடு பெறவில்லை. அதுவும் இப்போதுதான் பரிசீலனையில் இருந்து வருகிறது. ஆனால் மைசூர் வெற்றிலைக்கு கர்நாடகா குறியீடு பெற்று பல ஆண்டுகளாகி விட்டது.

பயனிழக்கும் புவிசார் குறியீடு: புவிசார் குறியீடு பல பொருட்களுக்கு வாங்கப்படவில்லை என்பதைவிடவும் வருத்ததுக்குரிய விஷயம் என்னவென்றால், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் முறையாக சந்தைப்படுத்தப்படுவதில்லை என்பதுதான். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் பெரும்பாலானவை பெயரளவில் அங்கீகாரத்துடன் இருக்கின்றனவே தவிர, முழுமையான சந்தைப்படுத்துதல் நிகழவில்லை.

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் உற்பத்தியாளர்கள்கூட அந்த அங்கீகாரத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர். ஆட்சியாளர்களுக்கும் இது குறித்து தெளிவான திட்டங்கள் இல்லை. பழனி பஞ்சாமிர்தத்தை எடுத்துக்கொள்வோம். பழனிக்கு யாத்திரை போகிறவர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, பழனி பஞ்சாமிர்தம் தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவலாகக் கிடைப்பதில்லை.

பற்பசையோ, ஷாம்புவோ புதிய லேபிளுடன் அறிமுகப்படுத்தப்பட்டால் அது அடுத்த மாதமே எல்லா ஊர்களிலும் கிடைத்துவிடுகிறது. ஆனால் தமிழகத்தில் புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள், குத்து விளக்குகள் உட்பட சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கக்கூடிய பொருட்களை மாவட்ட அளவில் சந்தைப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ அரசுத் துறைகளோ முன்வரவில்லை என்றால் புவிசார் குறியீட்டைப் பெறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

என்ன செய்ய வேண்டும்?

பல மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் குழுக்களின் சுயஉற்பத்தி பொருட்களுக்கு தனியானதொரு அங்காடி வளாகம் அமைத்து தரப்பட்டிருக்கிறது. அதேபோல் புவிசார் குறியீட்டுப் பொருட்களுக்கான விற்பனை மையத்தை மாவட்ட நிர்வாகங்களே தொடங்கலாம்.

மாவட்ட அளவில் வேளாண்மை, கைத்தறி, கதர், கிராமத் தொழில்கள், தொழில்துறை உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

புவிசார் குறியீடு பெறுவதற்கான தகுதியுள்ள பொருட்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு குறியீடு பெற்றுத் தர வேண்டும். புவிசார் குறியீட்டை வெறும் அடை யாளமாக சுருங்கச் செய்யாமல், அதை அர்த்தமுள்ளதாக்குவது அரசு கையில்தான் இருக்கிறது.

> இது, லெவின் ஆறுமுகம் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon