Published : 05 Jun 2022 02:58 PM
Last Updated : 05 Jun 2022 02:58 PM

குழந்தைகளின் ‘டீஹைட்ரேஷன்’ பாதிப்பை அறிந்து சரிசெய்வது எப்படி? - மருத்துவர் கைடன்ஸ்

குழந்தைகள் குறைந்தது ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் போவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது; அத்தனை முறை போவார்கள். குழந்தைகளைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே அவர்களுக்கு உடை மாற்றிவிடும் தாய்மார்களை ஒவ்வொரு வீடுகளிலும் பார்க்கலாம். அப்படி சேட்டை செய்யும் குழந்தைகள் திடீரென சிறுநீர் போகாமல் இருந்துகொண்டு, மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு சொட்டுச் சொட்டாக அதிக நெடியுடன் அடர் மஞ்சள் நிறத்தில் போவார்கள். அந்த நேரத்தில் சில குழந்தைகள் அழவே செய்துவிடுவார்கள். சிறுநீர் பாதையில் அவ்வளவு எரிச்சல் இருக்கும். இதனைப் பார்க்கும் தாய்மார்களின் நிலையை கேட்கவா வேண்டும். பதறிப் போய்விடுவார்கள்.

இந்த நீரிழப்பில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில் குமரனிடம் பேசினோம்.

டாக்டர் ஜி. செந்தில் குமரன், குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி.

“குழந்தைகளுக்கு பொதுவாகவே சிறுநீர் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை போக வேண்டும். அப்படி போகாமல் இருந்தால் சிறுநீர் கொஞ்சம் அடர்த்தியாக வரும். சில நேரங்களில் நெடியும் அடிக்கும். அப்போது சிறுநீர்ப் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு குழந்தைகள் அழவும் செய்வார்கள். இதனை ஊர்ப்புறங்களில் சூடு பிடித்திருக்கிறது என்பார்கள். இல்லை, மஞ்சள்காமாலை என்று வைத்தியரைத் தேடி கொண்டிருப்பார்கள். இது தவறு. அவர்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டு அதற்கு தண்ணீரினை நன்றாகக் குடிக்க கொடுத்தாலே சரி செய்து விடலாம்.

டாஸ்க் வைத்து தண்ணீர் கொடுங்கள்

தற்போது பெற்றோர்கள் எவ்வளவுதான் சிரத்தை எடுத்து குழந்தைகளைப் பார்த்துக்கொண்டாலும் அவர்களுக்கு திட உணவினை ஒரு பிஸ்கட் ஆகவோ அல்லது இட்லி மற்றும் பருப்பு சாதமாகவோ எப்படியாவது ஊட்டி விடுவார்கள். ஆனால் தண்ணீர் கொடுக்கும் விஷயத்தைப் பற்றி மட்டும் அவ்வளவாக யோசிக்க மாட்டார்கள். அதிலும் தண்ணீர் கொடுப்பதுதான் அவர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். குழந்தைகளாகவே தண்ணீர் குடித்தால் மட்டும்தான் உண்டு. மிகவும் மல்லுக்கட்டி நாம் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.

கோடை காலத்தில் வாந்தி, பேதி நோய்கள் அதிகம் வரும். மேலும் வெகுசுலபமாக நீரிழப்புக்கு ஆளாகி விடுவார்கள். அதிலும் வெயில் காலத்தில் கேட்கவே வேண்டாம். குழந்தை நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும்பட்சத்தில் பயந்துகொண்டு உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

ஒரு இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டு தண்ணீரை உடலில் சமன் செய்தாலே நீர் வறட்சியை விரட்டிவிட முடியும். அதற்கு முதலில் நீரிழப்புக்கு ஆளான குழந்தைகளுக்கு ஒவ்வொரு தாய்மார்களும் செய்ய வேண்டியது, நாள் ஒன்றுக்கு 1-2 லிட்டர் தண்ணீர் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதினை ஒரு டாஸ்க்காக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் குழந்தைகளின் தாகம் பொறுத்து குடிக்கும் தண்ணீரின் அளவு கொஞ்சம் கூடும் குறையலாம்.

தண்ணீர் கொடுக்கும் முறை

தண்ணீரை நன்கு சுட வைத்து, தேவையென்றால் கொஞ்சம் சீரகம் போட்டு சுட வைத்துக்கொள்ள வேண்டும். அதனை 1 லிட்டர் அளவு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட வேண்டும். தண்ணீர் குழந்தை குடிக்கும் அளவில் மிதமான சூடாக இருக்குப்படி கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். அந்த 1 லிட்டர் தண்ணீரை அளவீடாக வைத்து நாள் முழுவதும் பாட்டிலில் குடிக்க வைக்க வேண்டும். குழந்தை இரவு வரை அந்தப் பாட்டிலில் எவ்வளவு தண்ணீர் குடித்திருக்கிறது என்று பார்த்துக்கொள்ள வேண்டும். சில குழந்தைகள் அரை லிட்டர் குடித்திருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் கம்மியாகவே குடித்திருப்பார்கள்.

ஆனாலும், ஒவ்வொரு நாளாக இதனை கொடுத்து அவர்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அவர்கள் நீரினை குடிக்க குடிக்க உடல் தன்னைத்தானே நீர் வறட்சியிலிருந்து சரிசெய்து கொள்ளும். இதில் ஏன் டாஸ்க் வைக்கிறோம் என்றால் மற்ற நேரங்களில் தண்ணீர் கடமைக்கு கொடுப்போமே தவிர, இவ்வளவு தண்ணீரைக் குடித்து ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் கொடுக்க மாட்டோம். எனவே, குழந்தைக்கு தற்போது ஊட்டி விடும் திட உணவில் நாம் காட்டும் முக்கியத்துவம் போல் குடிக்கும் நீருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல பழக்கம் வரும். நீர் வறட்சியும் நீங்கி விடும். இதுபோல் தொடர்ந்து குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்துப் பழக வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது...

இது எல்லாமே, காய்ச்சல் இல்லாமல் நன்றாக சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டுதான். ஆனால் காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் அழுதுகொண்டே இருந்தாலும், சீறுநீரின் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், கைப் பக்குவம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏனென்றால் இன்பெக்ஷன் ஆகியிருக்கும் பட்சத்தில் அதனை நாம் தண்ணீர் கொடுத்து சரி செய்து கொண்டிருக்க முடியாது. பொதுவாக நீரிழப்பினை பெரியவர்கள் போல் குழந்தைகளால் ஓரிரு நாட்கள் என்று தாங்கி கொள்ள முடியாது. உடனே குழந்தை மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையளிப்பது நல்லது.

> இது, ஜி.காந்தி ராஜா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x