Published : 26 May 2022 08:15 PM
Last Updated : 26 May 2022 08:15 PM

ஒற்றைத் தேநீர் கோப்பை வழியே அன்பைப் பகிரும் இளம் தம்பதியர் - இது வைரல் காதல் கதை!

அஃப்சல் - சபீனா.

ஆதாம் - ஏவாள் தொடங்கி பூவுலகம் பல காதல் கதைகளைக் கொண்டாடி தீர்த்துள்ளது. இந்தக் காதல் கதைகளின் வரிசையில் புது வரவாக அமைந்துள்ளது அஃப்சல் - சபீனா தம்பதியரின் காதல்.

காதல் எனும் சொல் புனிதமானது. அது உணர்வுகளின் வெளிப்பாடு. அதை எத்தனையோ கவிஞர்கள் தங்கள் வரிகளால் வெளிப்படுத்தி வருகின்றனர். சில காதலர்களின் கதைகள் கவிஞர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காதல் கதைதான் அஃப்சல் - சபீனா தம்பதியரின் கதை. எந்நேரமும் மும்முரமாக இயங்கி வரும் தலைநகர் டெல்லி இருவரும் வசித்து வருகின்றனர். ஒரு கோப்பை தேநீரில் பரஸ்பரம் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் அவர்களது கதையை பார்ப்போம்.

வாகனங்கள் பரபரக்கும் டெல்லி நகர சாலையோர தேநீர் கடையில் இவர்களை அடையாளம் கண்ட இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், அவர்களது கதையை அப்படியே பகிர்ந்துள்ளார். இப்போது பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது அந்தக் காதல் கதை.

21 வயதான அஃப்சலும், 19 வயதான சபீனாவும் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இருவரும் பால்ய கால நண்பர்கள். இப்போது கணவன் - மனைவியாக வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். கடந்த 2019-இல் தான் தங்களுக்குள் காதல் இருப்பதை உணர்ந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

ஒல்லியான தேகம். ஒட்டிப்போன கன்னம். பார்க்க அப்படியே நம் பக்கத்து வீட்டு பையனை போல இருக்கும் தோற்றத்தை கொண்டவர் அஃப்சல். டெல்லி நகரில் தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். "2019 வாக்கில்தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இல்லையென்றால் அதை நாங்கள் உணர்ந்த தருணம் என்று கூட சொல்லலாம். நண்பர்களாக தொடங்கி காதலர்களாக இணைந்து இல்வாழ்க்கையை தொடங்கினோம். எங்களது காதலுக்கு வீட்டில் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை" என சாலையோரம் உள்ள நாற்காலியில் அமர்ந்தபடி தேநீர் குடித்துக் கொண்டே தங்களது கதையை சொல்கின்றனர் அஃப்சல் - சபீனா தம்பதியர்.

"அவரது வேலை தான் அதற்கு காரணம்" என்கிறார் சபீனா. இருவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் டெல்லி நகர பூங்கா ஒன்றில் திருமணம் நடந்துள்ளது. அதில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு கூல் டிரிங்க்ஸ் மற்றும் ரசகுல்லா பரிமாறப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு ஓர் அறையை வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வருகின்றனர்.

"நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தேநீர் குடித்தால் ஒரே கோப்பையில்தான் குடிப்போம். அதனை நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பது தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன்" என்கிறார் சபீனா. அது வெறும் வார்த்தைகள் அல்ல அது அன்பின் வெளிப்பாடு. சமயங்களில் உணவை கூட ஒரே தட்டில் இருவரும் பகிர்ந்து கொள்வார்களாம்.

"நான் அவரைக் காதலித்து கைப்பிடித்துள்ளேன். ஃபேமிலி மேனான எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளதாக உணர்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது நாள்தோறும் சம்பாதித்து வரும் 300 ரூபாய் போதாது. அதை வைத்து குடும்பம் நடத்த முடியாது. கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பேன்" என பொறுப்பாக பேசுகிறார் அஃப்சல். வேலை முடிந்த கையோடு வீடு திரும்பும் அவர், தனது மனைவிக்கு ஒத்தாசையாக உணவு தயார் செய்யவும் உதவி செய்வாராம்.

"அவரது ஹேர்-ஸ்டைல், அவர் பேசும் விதம் என்னை அதிகம் ஈர்த்தது" என்கிறார் சபீனா.

"நான் எங்கிருந்து தொடங்குவது? அவரை அணு அணுவாக நான் ரசிக்கிறேன். அனைத்தையும் விட அவரது இயல்பு தன்மையை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்கிறார் அஃப்சல்.

இருவரும் திருமணத்திற்கு பிறகு பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். அவ்வப்போது செல்லச் சண்டையிலும் ஈடுபடுவார்களாம். அப்படியே அவர்கள் பேசிக் கொண்டே இருக்க அவர்களது கோப்பையிலிருந்த தேநீர் தீர்ந்ததும் இருவரும் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

'தி டெல்லி வாலா' என்ற இன்ஸ்டா பக்கத்தில் அஃப்சல் - சபீனா தம்பதியரின் காதல் கதை பகிரப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x