Published : 11 May 2022 06:22 PM
Last Updated : 11 May 2022 06:22 PM
மதுரை: சென்னையில் மணப்பெண் ஒப்பனைக்கலைஞரான சிந்துஜா, இயற்கை விவசாயம் மீதான ஈடுபாட்டால் சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கைமுறையில் விவசாயம் செய்து விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் - சுகுணா ராஜம் ஆகியோரின் மகள் சிந்துஜா (39). பி.எஸ்.சி., பி.எட்., படித்துள்ளார், மணப்பெண் ஒப்பனைக் கலைஞராகவும் உள்ளார். இவர் சென்னை சாலிக்கிராமத்தில் மணப்பெண் ஒப்பனை அலங்கார மையம் நடத்தி வருகிறார். இவரது கணவர் பிரகாஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டே சொந்தஊரான ஆண்டிப்பட்டி அருகே பெருமாள்பட்டியில் இயற்கை முறையில் விவசாயம் செய்துவருகிறார். இதனால் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட சிந்துஜா, உசிலம்பட்டியில் உள்ள பெற்றோரது சொந்த நிலமான 3 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
இதுகுறித்து சிந்துஜா கூறியதாவது: ''பிஎஸ்சி பிஎட் படித்துள்ளேன். சென்னையில் மணப்பெண் ஒப்பனைக் கலைஞராக உள்ளேன். இயற்கை முறை விவசாயத்தின் மீதான ஈடுபாட்டால் விவசாயம் செய்து வருகிறேன். எங்களது சொந்த நிலத்தில் மாட்டுச்சாணம், இயற்கை உரம், பஞ்சகாவ்யா, மண்புழு உரம், ஜீவாமிர்தம் மூலம் மண்ணை வளப்படுத்தி வருகிறேன். தைவான் பிங்க் ரக கொய்யா நடவு செய்து தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இதில் ஊடுபயிராக கொத்தவரங்காய் பயிரிட்டுள்ளேன். தலா 50 சென்ட் பரப்பில் கத்தரிக்காய், பச்சை மிளகாய், தக்காளி, கீரைகள் பயிரிட்டுள்ளேன். தற்போது கொத்தவரங்காய் அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பி வருகிறேன். தற்போது சந்தையில் ஒருகிலோ ரூ. 12க்கு போவதால் செலவுக்கும் வரவுக்கு சரியாக இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் விளையவைக்க அதிக செலவாகிறது. ஆனால் சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை. ரசாயனத்தில் விளைந்த காய்கறிகளைப்போலவே இதனையும் விலைக்கு கேட்கின்றனர். இதனால் லாபம் கிடைக்கவில்லை.
இயற்கை விவசாயத்தையும், இயற்கை விவசாயிகளையும் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை முறை விவசாய விளைபொருட்களுக்கு தனிச்சந்தையும், தகுந்த விலையும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'', என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT