Published : 08 May 2022 03:01 PM
Last Updated : 08 May 2022 03:01 PM
காலத்தைக் கொண்டாட என ஒரு நாளைக் குறிப்பது எவ்வளவு அபத்தமோ, அதே போன்ற அபத்தமே அன்னையரைக் கொண்டாட என ஒரு தினத்தைத் தனியே ஒதுக்குவது. நம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். நமக்கான உலகைச் சுமந்தவர்கள் / சுமப்பவர்கள் / சுமக்கப் போகிறவர்கள் அவர்கள்.
நமக்கும் அன்னைக்குமான உறவு இவ்வுலகை நாம் பார்க்கும் முன்னரே தொடங்கிவிடுகிறது. சொல்லப்போனால், நாம் உருப்பெறும் முன்னரே தொடங்கிவிடுகிறது. மசக்கையில் வாடி வதங்கும்போதும் நமக்காக / நம் நலனுக்காக என வலுக்கட்டாயமாகச் சாப்பிடுவதில் தொடங்குகிறது அவர்களின் அன்பு. அதிர்ந்து நடக்காமல், குப்புறப் படுக்காமல், நம்மை வயிற்றில் சுமந்தபடி திரிவதில் தொடங்குகிறது அவர்களின் தியாகம்.
நாம் அவர்களின் வயிற்றில் இருக்கும்போதும் சரி, உலகில் தனிமனிதராக எழுந்து நிமிர்ந்து நடக்கும்போதும் சரி, நம்மை ஒருபோதும் அவர்கள் சுமையாகக் கருதியதில்லை. இனி கருதப் போவதுமில்லை. ஆனால், காலவோட்டத்தில், வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அவர்களைச் சுமையாக உணரத் தொடங்குகிறோம் என்பதற்கு முதியோர் இல்லங்களில் தனித்து விடப்பட்டிருக்கும் அன்னையர்களே மௌன சாட்சிகள். குரூர மனித இயல்பின் சுயநலமிக்க அவலங்களில் இதுவும் ஒன்று. இந்த அவலங்களிலிருந்து அன்னையர்களைக் காத்து, மதித்து, போற்றுவதற்கு என உருவான தினமே சர்வதேச அன்னையர் தினம்.
அன்னையர் தின வரலாறு
1905இல் அன்னா எனும் பெண்ணின் தாய் இறந்துவிட்டார். தன்னுடைய அன்னையின் நினைவாக 1908ஆம் ஆண்டு மே மாதத்தில், அங்கிருக்கும் பெண்களைத் திரட்டி முதன் முதலாக அன்னையர் தினத்தை அன்னா கொண்டாடினார். அதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் அந்த நிகழ்வு வாடிக்கையானது. உலகில் உள்ள அனைத்து அன்னையர்களையும் போற்றும் வகையில், இந்த அன்னையர் தினத்தை அமெரிக்க அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார். பின் அந்தக் கோரிக்கைக்காகத் தொடர்ந்து போராடினார். இது தொடர்பாக அவர் முன்னெடுத்துச் சென்ற காத்திரமான போராட்டங்களுக்கு இறுதியாகப் பலன் கிடைத்தது. ஆம், அமெரிக்காவின் 28வது அதிபராகப் பொறுப்பு வகித்த தாமஸ் உட்ரோ வில்சன் அன்னாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதற்கான பிரகடனத்தில் 1940ம் ஆண்டு மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார். அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
எப்படி மகிழ்விக்கலாம்?
பணம் கொடுத்து வாங்க முடியாத பொருட்களில் முதன்மையானது அன்பு. எனவே, அன்னையர் தினம் என்றவுடன் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அன்னையர்களை மகிழ்விக்க முயற்சிப்பது அர்த்தமற்ற ஒன்று. நீங்கள் அவர்களுக்கு என்று பிரத்தியேகமாக ஒதுக்கி செலவிடும் நேரம், அவர்களுக்கு நீங்கள் வாங்கிக்கொடுக்கும் விலையுயர்ந்த பொருட்களை விட உயர்வானது. நமக்காக, நம்முடைய குழந்தைக்காக என்று தன்னுடைய சின்ன, சின்ன ஆசைகளைக் கூட நம்முடைய அன்னை மனத்தின் ஆழத்தில் மறைத்து வைத்து வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடும். அத்தகைய ஆசைகளைக் கண்டறிந்து நிறைவேற்றுவது அவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதற்கு உதவும் சில வழிகள்:
இது என்றும் தொடர வேண்டும்
இந்தக் கொண்டாட்டமும் மகிழ்வும் இன்றோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. இது ஆண்டின் எல்லா நாளிலும் தொடர வேண்டும். இன்று நம்முடன் எல்லாமுமாக இருக்கும் அன்னை நாளை நம்முடன் இல்லாமல் போக நேரிடும். அதுவே இயற்கையும் கூட. நிரந்தரமற்ற வாழ்வில் இழப்புகள் மட்டுமே நிரந்தரமாகத் தொடரும் என்பதே நம் வாழ்க்கையின் நியதி. வாழ்வின் அந்திம பருவத்தில் இருக்கும் அன்னை நம்முடன் இருக்கப் போகும் நாட்கள் தினமும் தொடர்ந்து குறைந்துகொண்டேதான் இருக்கும். அவை ஒருபோதும் அதிகரிக்கப் போவதில்லை. அன்னை நம்முடன் வாழப்போகும் எஞ்சியிருக்கும் நாட்கள் அனைத்தையும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம். அன்னையைக் கொண்டாடுவது என்பது ஏதோ ஒரு தனி ஒரு பெண்மணியைக் கொண்டாடும் நிகழ்வு அல்ல; அது நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் கொண்டாடும் நிகழ்வு, அந்த சமூகத்தில் நாமும் ஒரு அங்கமே. முக்கியமாக, நம் குழந்தைகளுக்கும் அதில் இடமுண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT