Published : 30 Apr 2022 03:07 PM
Last Updated : 30 Apr 2022 03:07 PM
நாடு முழுவதுமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கத்தால் பெரியவர்களைவிட, குழந்தைகளுக்குக் கூடுதலான பிரச்சினைகள் தோன்றும். அவற்றைத் தடுக்கவும் சமாளிக்கவும் சில யோசனைகள்:
வெயிலில் விளையாட வேண்டாம்: கோடை காலத்தில் வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் விளையாட வேண்டாம் என்று குழந்தைகளுக்குப் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். விளையாட வேண்டும் என்று நினைத்தால் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வெளியில் விளையாடாமல் இருக்க வேண்டும்.
> வீடு வெளிச்சமாக இருப்பது மட்டுமின்றி, காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். வீட்டுக்குள் அனல் அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
> வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்கக் குழந்தைகளுக்கு இயற்கையான - மெல்லிய நறுமணம் கொண்ட லோஷன்கள், சந்தனம், பவுடர்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றின்மூலம் ஒவ்வாமை வராது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு செய்ய வேண்டும்.
நீர்ச்சத்து உணவுகளை கொடுங்கள்: கோடை காலத்தில் காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிடக் கொடுக்க வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
> எண்ணெயில் பொரித்த உணவைத் தர வேண்டாம். அசைவ உணவையும் குறைவாக எடுத்துக்கொள்வது பலன் தரும்.
> குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் ஜூஸ், உணவை மட்டுமே கொடுக்க வேண்டும்.
தோல் பிரச்சினைகள்: கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகள் வெயிலில் அதிகமாக விளையாடுவார்கள். வெயில் ஒத்துக்கொள்ளாமல் சில குழந்தைகளுக்குத் தோலில் அரிப்பு ஏற்படலாம். சில நேரம் திட்டுத்திட்டாகவும் அலர்ஜி ஏற்படலாம். இதற்கு 'போட்டே டெர்மடைட்டிஸ்' என்று பெயர். இதை ‘சூரிய ஒளி ஒவ்வாமை' என்று சொல்லலாம். சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் சூரிய ஒளி ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
> வெயிலில் அதிகம் அலைந்தால் தோலில் கொப்புளம் ஏற்படலாம். முடியின் வேர் பகுதியில் பாக்டீரியா கிருமி தொற்று ஏற்படுவதால் இந்தக் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. அதேபோல வியர்வை வெளியேறும் துளைகள் அடைத்துக் கொள்வதால் வரும் வியர்க்குரு பிரச்சினை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களையும் பாடாய்ப்படுத்தலாம்.
> கொப்புளம், வியர்க்குரு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கக் குழந்தைகளின் உடலோடு ஒட்டி இருப்பது போன்ற இறுக்கமான ஆடைகளைப் பயன் படுத்தாமல் இருப்பது நல்லது. தளர்வான உடைகளே ஏற்றவை. அதிலும் பருத்தி ஆடை மிகவும் நல்லது.
பெரியவர்களும் கவனம்: கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்கக் குழந்தைகளுக்குச் சொன்ன எல்லாத் தடுப்பு முறைகளும் பெரியவர்களுக்கும் பொருந்தும். அதேநேரம், பெரியவர்கள் வெளியில் செல்லும்போது தரமான கூலிங் கிளாஸ், கறுப்பு நிறமற்ற குடைகளைப் பயன்படுத்தலாம். இது கண்களையும் தோலையும் புறஊதாக் கதிரின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.
> உடல் அதிகமாகச் சூடாக இருப்பது போல உணர்ந்தால் பாட்டிலில் குளிர்ந்த நீரை அடைத்துக் கணுக்கால், மணிக்கட்டு, மூட்டுகளில் வைத்து, சூட்டைக் குறைக்கலாம்.
நீர்ச்சத்தை அதிகரியுங்கள்: கோடை காலத்தில் வெயிலில் அலையாவிட்டாலும்கூட வியர்வை வழியாக உடலில் நீர்ச்சத்து குறைந்துகொண்டே இருக்கும். எனவே, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 10 - 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
> வெயிலை வெல்லக் குழந்தைகளுக்கு இதமான பானங்களைக் கொடுப்பதே நல்லது. குளிர்பானங்களைப் பருகுவதைவிட பழச்சாறுகளைக் கொடுப்பது உடலுக்கு ஊட்டத்தையும் உடனடி சக்தியையும் கொடுக்கும்.
> குழந்தைகளைத் தினமும் இரண்டு முறை குளிக்க வைப்பதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்க முடியும். அடிக்கடி முகத்தைக் கழுவுவதால், சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
- `நலம் வாழ` பகுதியிலிருந்து. | #ThrowbackHTT
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment