Published : 23 Apr 2022 05:09 PM
Last Updated : 23 Apr 2022 05:09 PM
"தடுத்து நிறுத்தப்பட்ட தற்கொலைகள், பல ஆண்டுகளுக்குப் பின் அப்பாக்களைத் தேடிப் போன மகன்கள், மகன்களைத் தேடிப் போன அப்பாக்கள், பிரிந்துபோன கணவன் - மனைவி மீண்டும் சேர்ந்தது..." - இத்தகைய தாக்கங்களை உருவாக்கியதில் புத்தகங்களுக்குப் பெரும் பங்கு உண்டு என அனுபவப்பூர்மாகச் சொல்கிறார் எழுத்தாளரும் கதைசொல்லியுமான பவா செல்லதுரை.
தற்போதைய யூடியூப் காலத்தில் நல்ல நூல்களை மக்களுக்கு அறிமுப்படுத்துவதில் கதை சொல்லிகளுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. வேலை - தொழில்முறை வாழ்க்கை ஓட்டத்தில் வாசிக்க நேரமின்றி தவிப்பவர்கள் தொடங்கி, இலக்கிய வாசிப்புக்கு அடியெடுத்து வைக்க விழையும் 2கே கிட்ஸ் வரையிலும் பல தரப்பினருக்கும் தமிழில் தனித்துவ கதை சொல்லியாக, மக்களிடம் புத்தகங்களைக் கொண்டு சேர்த்து வருகிறார் பவா செல்லதுரை. இன்று - ஏப்.23... உலக புத்தக தினம். இதையொட்டி, அவரது வாசிப்பு அனுபவத்தைப் பகிரும் வகையிலான பேட்டி இது...
வாசிப்பு மீதான ஆர்வம் எப்போது வந்தது?
"நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன்முதலில் பாடப் புத்தகங்களைத் தாண்டி இலக்கியப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். முதன்முதலில் வாசித்த புத்தகம் நன்றாக நினைவில் உள்ளது. ஜெயகாந்தனின் 'ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்' என்ற புத்தகத்தையே முதலில் வாசித்தேன். அதுதான் வாசிப்பின் மீதான ருசியை எனக்கு முதலில் கொடுத்தது. அப்படித்தான் புத்தகம் வாசிக்கத் தொடங்கினேன்."
கல்லூரியில் இலக்கியப் பாடத்தை தேர்ந்தெடுக்காதபோதும், உங்களது இலக்கிய ஆர்வம் கூடியது எப்படி?
"நான் படித்தது பி.காம். தமிழ், ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் தங்கள் பாடப் புத்தகத்தில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அதைத் தாண்டி வேறு புத்தகங்களை அதிகமாக வாசிப்பதில்லை. ஆனால், மற்ற துறையில் உள்ளவர்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்பு மிக குறைவுதான். எனவே, எதாவது புதிதாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் புத்தகம் வாசிக்கிறார்கள். எழுத்தாளர்களையே எடுத்துக்கொள்ளுங்களேன்... இலக்கியம் படித்தவர்களை விட கணிதம், அறிவியல், வணிகம் படித்தவர்கள்தான் அதிகம். எனவே, நமது பாடத்துறைக்கும் வாசிப்புக்கும் தொடர்பே இல்லை என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். நான் எனது கல்லூரி காலத்தில்தான் வெறித்தனமாக வாசித்தேன். தமிழ் இலக்கியங்களை அதிகமாக படித்தேன்."
உங்களுக்குப் புத்தக வாசிப்பு என்னவெல்லாம் கற்றுத் தந்துள்ளன?
"பொது சமூகம் வாழ்க்கையை எப்படி பார்க்கக் கற்றுக்கொடுத்ததோ, அதிலிருந்து மாற்றி பார்க்கக் கற்றுக்கொடுத்துள்ளது புத்தகங்கள்தான். சக மனிதர்கள் மீது அன்பை கடத்துவதற்கு புத்தகங்கள்தான் பெரும் உதவி. இந்த வாழ்க்கை மிகவும் சிறிதுதான், அதில் நீ ஒரு சிறு புள்ளிதான். அந்தப் புள்ளிக்குள் எவ்வளவு நேர்த்தியாக, சுதந்திரமாக வாழ முடியுமோ வாழ்ந்துக்கொள் என புத்தகங்கள்தான் கற்றுக்கொடுத்தன."
வாசிக்கும் புத்தகங்களை தோராயமாக எண்ணிக்கையில் வைப்பதுண்டா?
"எந்த எழுத்தாளரும் வாசகரும் புத்தகங்களை கணக்கு வைக்கமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். எந்த எழுத்தாளரும் அப்படிச் சொல்லியும் நான் பார்த்ததில்லை. புத்தகங்கள் அடுத்தடுத்து தேட வைக்கின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் கருத்தும் தகவல்களும் அடுத்தப் புத்தகங்களை நோக்கி ஓடவைக்கிறதே தவிர, எண்ண வைக்கவில்லை. செடிகள் எத்தனைப் பூக்களைத் தருகின்றன என்ற கணக்கு இருப்பதில்லை. பூ பூக்கும்... உதிரும்... மீண்டும் பூக்கும்... அப்படித்தான் வாசித்தலும்."
உங்களை மிகவும் கவர்ந்த புத்தகங்கள்?
"என்னைக் கவர்ந்த புத்தகங்கள் அதிமாக உள்ளன. குறிப்பிட்டு ஐந்து புத்தகங்களைச் சொல்ல வேண்டும் என்றால், இவற்றைச் சொல்லலாம்... எனக்கு மொழிபெயர்ப்புகளை விட தமிழ் இலக்கியம்தான் மிகவும் பிடிக்கும். ஜெயகாந்தனின் 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்', ஜெயமோகனின் 'வெள்ளை யானை', சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே சில குறிப்புகள்', தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', மொழிபெயர்ப்பு நூல் என்றால் கல்பட்டா நாராயணனின் 'சுமித்ரா'. இவையெல்லாம் என்னைக் கவர்ந்த புத்தகங்கள்."
படைப்பாளி, வாசகர்... பவா செல்லதுரைக்கு எதுவாக இருப்பது பிடித்துள்ளது?
"நான் படைப்பாளி என்பதில் பெருமைப்படுகிறேன். அதுதான் சமூகத்தில் ஒரு மாற்றத்தைத் தருகிறது. ஆனால், நான் படைப்பாளியாவதற்கு வாசகன் என்ற கதாப்பாத்திரம்தான் உதவியது. வாசிக்க வாசிக்கதான் புதிதாக ஒன்றைப் படைக்க முடியும். வாசிப்பின் முற்றல்தான் படைப்பு."
எந்த வகையான புத்தகங்களை அதிகமாக வாசிப்பீர்கள்?
"கட்டுரைகள் மற்றும் வரலாறுகளை மிகக் குறைவாகத்தான் படிப்பேன். புனைவுகள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே அப்படித்தான். ஒரு புனைவுக்கும் இன்னொரு புனைவுக்கும் இடையில் ஒரு கவிதைத் தொகுப்பு படிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். சுயசரிதை நூல்கள் அதிகமாக வாசிக்கும் பழக்கம் உண்டு.
சிறு வயதில் கதைகள் கேட்டதுண்டா? கதை சொல்லத் தொடங்கியது எப்போது?
"என் அம்மா நிறைய கதைகள் சொல்லுவார். அதிகமான கதைகளைக் கேட்டதுண்டு. ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. அப்போதுதான் கதை சொல்லத் தொடங்கினேன். மிகவும் சாதாரணமாக ஆரம்பம் ஆனதுதான் அது. ஆனால், தற்போது தீயாய் பரவியுள்ளது. இதனால், இன்னும் பொறுப்புடன் செய்லபட வேண்டிய பாதையில் உள்ளேன்."
நீங்கள் கதை சொல்வதைக் கேட்டு, உங்களுக்கு வந்த மனதுக்கு நெருக்கமான விமர்சனங்கள்... குறிப்பாக, தாக்கங்கள் எத்தகையது?
"ஒன்று ரெண்டு அல்ல... ஆயிரக்கணக்கில் உள்ளன. தடுத்து நிறுத்தப்பட்ட தற்கொலைகள், பல ஆண்டுகளுக்குப் பின் அப்பாவைத் தேடிப் போன மகன், மகன்களைத் தேடிப் போன அப்பாக்கள், கணவன் - மனைவி பிரிந்து இருந்து மீண்டும் சேர்ந்தது, இவர்களின் பிரச்சினை முடிந்து சேர்ந்த பின் 'உங்கள் கதையைக் கேட்ட பிறகுதான் இது நடந்தது' என நெகிழ்ச்சியோடு சொல்வார்கள். இதுபோன்ற தாக்கங்களையும் விமர்சனங்களையும் வைத்து ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்."
இதுவரை கதை சொல்வதற்காக பயணித்த இடங்கள், இனி பயணிக்கப்போகும் இடங்கள்..?
"தமிழ்நாட்டில் ஏராளமான ஊர்களிலும், வளைகுடா நாடுகளில், சிங்கப்பூர், மலேசியா என பல பகுதிகளுக்குச் சென்று கதை சொன்னதுண்டு. வரும் ஜூலையில் அமெரிக்கா செல்லவுள்ளேன். அதனைத் தொடர்ந்து ஐரோப்பா செல்கிறேன். யார் கூப்பிட்டாலும் கதை சொல்ல கிளம்பிவிடுவேன். இன்று மாலை கூட கோவையில் கதை சொல்லவுள்ளேன்."
தற்போதைய சூழலில் இ-புத்தகங்களை மக்கள் அதிகம் நாடத் தொடங்கியிருக்கிறார்களா..?
"இல்லை, முன்பை விட பேப்பர் புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. 10% மக்கள்தான் இ-புத்தகம் படிக்கிறார்கள். அதுவும் வெளிநாடுகளில் இருப்பவர்கள்தான் அதிகம். 250 ரூபாய் புத்தகத்தை இங்கிருந்து வாங்கி அனுப்புவதற்கு 1,000 ரூபாய் செலவாகும். எனவேதான் அவர்கள் இ-புத்தகமாக படிக்கிறார்கள். அதிகமான மக்கள் வாசிக்கிறார்கள். இன்னும் அதிகமானோர் வாசிக்க வேண்டும். வகுப்பறைகளைத் தாண்டிய உலகம் உள்ளது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அலுவலகத்தைத் தாண்டி உலகம் உள்ளது என்பதை பணியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொது சமூகம் என்பது பெரிய திறந்தவெளி. அதற்குள் உங்களைப் புகுத்திக்கொள்ள புத்தகங்கள் மட்டும்தான் ஒரே ஒரு ஆற்றல். ஆகையால், அதிகமாக வாசிக்க வேண்டும்."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment