Last Updated : 16 Apr, 2022 06:20 AM

 

Published : 16 Apr 2022 06:20 AM
Last Updated : 16 Apr 2022 06:20 AM

வீட்டுச் சுவர்களை பசுமையாக்கும் செங்குத்து தோட்டம்: தூத்துக்குடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் ஒரு வீட்டில் சுற்றுச்சுவர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தோட்டத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட விஜய் மணி. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் ஆகியவற்றைப் போல், வீடு மற்றும் அலுவலகச் சுவர்களில் அழகுச்செடிகளை வளர்க்கும் செங்குத்து தோட்டம் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

செங்குத்து தோட்டம் அமைத்துக் கொடுப்பதை தொழிலாக மேற்கொண்டு வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த டி.விஜய் மணி (29). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்து முடித்தார். தற்போது, செங்குத்து தோட்டம் அமைக்கும் தொழில், அவரை இளம் தொழில் முனைவோராக மாற்றியுள்ளது.

மண்புழு உரம்

'இந்து தமிழ் திசை' நாளிதழிடம், விஜய் மணி கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் போது மண்புழு உரம் தாரிப்பது எனக்கு துணைப் பாடமாக தரப்பட்டது. அப்போது, வீட்டில் மண்புழு உரம் தயாரித்து சைக்கிளில் சென்று வீடு வீடாக விற்பனை செய்தேன். அப்போது சிலர் வீட்டுத் தோட்டம் அமைத்து தரச் சொன்னார்கள். இவ்வாறுதான் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்துக் கொடுத்து, அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். தற்போது, 26 வீடுகளில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், பால்கனி தோட்டம் அமைத்துக் கொடுத்து தொடர்ந்து பராமரித்து வருகிறேன். இதேபோல், சென்னை மற்றும் பெங்களூருவில் தலா 4 வீடுகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன்.

இயற்கை வேளாண்மை

தோட்டம் அமைக்க ஒரு பைக்கு ரூ.150 வாங்குவேன். பை, உரம், தென்னை நார்க்கழிவு, விதை உள்ளிட்டவை இதில் அடக்கம். உரமிடுவது, சேதமடைந்த செடிகளை மாற்றுவது என பராமரிப்புக்கு ஒரு முறைக்கு ரூ.500 கட்டணம் வாங்குவேன். காய்கறிகள், எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி போன்றவற்றை இயற்கை முறையில் வளர்த்துக் கொடுக்கிறேன்.

அழகு செடிகள்

தூத்துக்குடியில் 5 வீடுகளில் செங்குத்து தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன். இதற்கான, அழகுச்செடிகளை ஓசூர், புனே போன்ற இடங்களில் இருந்து வரவழைக்கிறேன். சுவர்களில் பிரேம் அமைத்து, அதில் பிளாஸ்டிக் பெட்டிகளை வைத்து செடிகள் வளர்க்கப்படுகின்றன. சொட்டுநீர் முறையில் தண்ணீர் வசதி செய்யப்படுகிறது. பலர் வீடுகளுக்கு உள்ளேயும் செங்குத்து தோட்டங்களை அமைக்கின்றனர். சிலர் சுவர் முழுவதையும் பசுமையாக மாற்றச் சொல்வார்கள். இதைப்பொறுத்து கட்டணம் நிர்ணயம் செய்கிறேன்.

இளைஞர்களுக்கு வேலை

என்னிடம், 7 இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறேன். அதுபோக, எனக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டில் வஉசி கல்லூரி சார்பில் எனக்கு இளம் தொழில்முனைவோர் விருது வழங்கினார்கள். இந்த தொழிலை விரிவுபடுத்தி, மேலும் பல இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். இவ்வாறு விஜய் மணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x